தானியங்களால் ‘ரங்கோலி’

தானியங்களால் ‘ரங்கோலி’

2 mins read
f17121df-b5ac-4485-9b76-b4eece8c25e7
13 வகைத் தானியங்களால் உருவாக்கப்பட்ட சிறப்பு ரங்கோலி. - படம்: கென்பரா இந்தியர் நற்பணிச் செயற்குழு

தமிழ்மொழி மாதக் கொண்டாட்டத்தை ஒட்டி, சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மாபெரும் சாதனை முயற்சி அரங்கேறியது.

30 சமூகத் தொண்டர்கள், குடியிருப்பாளர்களின் கைவண்ணத்தில், 4 மீட்டருக்கு 4 மீட்டர் பரப்பளவில் தானியங்களால் ஆன மிகப் பெரிய ‘ரங்கோலி’ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 200 குடியிருப்பாளர்கள் சாட்சியாக நின்ற இந்த நிகழ்வு, சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து நிகழ்ச்சிக்கு மகுடம் சூட்டியது.

கென்பரா இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்திருந்த ‘சித்திரைக் கொண்டாட்டம்’ நிகழ்ச்சியில் ‘ரங்கோலி’ காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்தியக் கலாசாரத்திலும் பாரம்பரியத்திலும் தானியங்களின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றும் விதமாக அமைந்திருந்தது ரங்கோலிப் படைப்பு.

மாப்பிள்ளை சம்பா, கவுனி அரிசி, பச்சைப் பயறு, கடலைப் பருப்பு, கறுப்பு உளுந்து, கம்பு என 13 வகைத் தானியங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ரங்கோலியைப் படைக்கத் தொண்டூழியர்கள் நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்னரே களமிறங்கினர்.

ஞாயிற்றுக்கிழமை (மே 3) கென்பரா சமூக மன்றத்தில் நிகழ்ச்சி இடம்பெற்றது. சிறுவர்களின் ஆட்டம் பாட்டம் எனக் களைகட்டிய நிகழ்ச்சியில் கென்பரா இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் 25வது ஆண்டுவிழாவும் சிறப்பு அம்சமாக அமைந்தது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஏப்ரல் மாதம் நடைபெற்ற மூன்று நாள் பயிற்சித் திட்டத்தில் 40 சிறுவர்கள் கலந்துகொண்டனர். தமிழ்மொழி விவாத அமர்வுகள், பாரம்பரியத் தமிழ் விளையாட்டுகள், கலாசார நடனங்கள் முதலியவை அதில் இடம்பெற்றன.

தமிழ்க் கலாசாரத்தில் பல விதமான தானியங்கள் உள்ளன என்பதையும் அவை எவ்வளவு ஆரோக்கியம் மிகுந்தவை என்பதையும் எடுத்துரைக்கும் விதமாக ரங்கோலி இருக்க வேண்டும் என்பது முக்கிய நோக்கங்களில் ஒன்று என்றார் தொண்டூழியர் நதியா செந்தில்குமார், 35.

ரங்கோலியின் வடிவமைப்பைத் திட்டமிட ஒரு மாதம் தேவைப்பட்டதாகக் குறிப்பிட்ட மற்றொரு தொண்டூழியரான தமிழ்ச்செல்வி ரவிக்குமார், 42, நன்கொடையாளர் ஒருவர் மூலம் தானியங்கள் தருவிக்கப்பட்டதாகச் சொன்னார்.

“பொதுவாக ரங்கோலி என்றாலே அதைப் புதுமையான முறையில் வரைய பழங்கள், காய்கறிகள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், தானியங்களை வைத்துச் செய்வது மிகவும் தனித்துவமான ஒன்று. பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நமது இந்தியக் கலாசாரம், பாரம்பரியத்தைப் பற்றி மேலும் விரிவாக அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகளையும் வருங்காலத்தில் உருவாக்க உள்ளோம்,” என்று தெரிவித்தார் கென்பரா இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவர் மல்லிகா சரவணன், 53.

குறிப்புச் சொற்கள்