உள்துறைக் குழு தேசிய சேவையாளர்களுக்கான மன்றம் (ஹோம்டீம்என்எஸ்) இணையக் கட்டமைப்பு மீது இணையம் வழி பிணைநிரல் (ரேன்சம்வேர்) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிணைநிரல் என்பது ஒரு வகை தீங்கு இழைக்கும் மென்பொருளாகும். அது இணையக் கட்டமைப்பை முடக்கி, அதில் உள்ள தளங்களையும் தரவுகளையும் தன்வசப்படுத்திக்கொள்ளும்.
இணையக் கட்டமைப்பு, அதில் உள்ள தரவுகள் ஆகியவற்றை மீட்டெடுக்க பிணைநிரல் அனுப்பியவர்கள் கோரும் தொகையைக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும்.
இந்நிலையில், தனது இணையக் கட்டமைப்பில் உள்ள சில தளங்கள் பிணைநிரல் மென்பொருளால் முடக்கப்பட்டுள்ளதாக ஹோம்டீம்என்எஸ் திங்கட்கிழமை (மார்ச் 3) தெரிவித்தது.
இணையம் வழித் தாக்குதல் குறித்து பிப்ரவரி 25ஆம் தேதி தெரியவந்ததாக அது கூறியது.
பாதிக்கப்பட்ட தரவுத்தளங்களில் ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் தொடர்பான தரவுகள் இருப்பதாக ஹோம்டீம்என்எஸ் தெரிவித்தது.
அத்துடன், உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள் சிலரின் வாகனங்கள் தொடர்பான விவரங்களும் அவற்றில் இருப்பதாக அது கூறியது.
இந்த விவரங்கள் பிணைநிரல் அனுப்பியவர்களிடம் சிக்காமல் இருக்க, பாதிக்கப்பட்ட தளங்களிலிருந்து அவை உடனடியாகப் பிரித்தெடுக்கப்பட்டதாக ஹோம்டீம்என்எஸ் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
தற்போதைய நிலவரப்படி இணையக் கட்டமைப்பில் இருந்த தரவுகள் திருடப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று குறிப்பிட்ட ஹோம்டீம்என்எஸ், நிலைமையை மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறியது.
லாப நோக்கமற்ற அமைப்பான ஹோம்டீம்என்எஸ், சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றின் தேசிய சேவையாளர்களுக்காக அமைக்கப்பட்டது.
இதற்கிடையே, இணையம் வழித் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த வெளியிலிருந்து இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஹோம்டீம்என்எஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அது கூறியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனது நிர்வாகத் தளங்களின் மறைச்சொற்கள் அனைத்தையும் மாற்றிவிட்டதாக ஹோம்டீம்என்எஸ் தெரிவித்தது.
அதுமட்டுமல்லாது, தனது இணையக் கட்டமைப்பின் பாதுகாப்பை மேம்படுத்த தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.
இணையம் வழித் தாக்குதல் காரணமாகப் பாதிக்கப்பட்டோருடன் தொடர்புகொண்டு அவர்களுக்குத் தேவையான உதவியை வழங்கி வருவதாக ஹோம்டீம்என்எஸ் தெரிவித்தது.
பிணைநிரல் தாக்குதலால் ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகள் துரிதமான முறையில், உடனடியாக எடுக்கப்பட்டதாக அது கூறியது.