ஹோட்டல் அறையில் பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக இரு ஆடவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலியல் குற்றம் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதிக்கும் 27ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பிராஸ் பசா சாலையில் உள்ள கார்ல்டன் ஹோட்டலில் உள்ள ஓர் அறையில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த இரு வெளிநாட்டு ஆடவர்களும் செப்டம்பர் 2ஆம் தேதியன்று உயர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு 49 மற்றும் 50 வயது.
அந்த இரு ஆடவர்களும் வழக்கு விசாரணை கோரியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தைக் காக்க அவ்விரு ஆடவர்களின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அந்த 49 வயது ஆடவருக்குக் கீழ் முன்பு பணிபுரிந்தவர் என்று தெரியவந்துள்ளது.
இரவு நேர உணவுக்குச் சந்திக்க இணங்கியதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அந்த இரு ஆடவர்களும் ஹோட்டல் அறையில் மதுபானம் அருந்தி பாலியல் உணர்ச்சியைத் தூண்டும் ‘வயாகரா’ மத்திரைகளை உட்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மூவரும் ஒன்றாகப் பாலியல் உறவு கொள்வது குறித்து அங்கு சென்றிருந்த அந்த 52 வயது கனடா நாட்டுப் பெண்ணிடம் அந்த ஆடவர்கள் கேட்டுக்கொண்டதாக அறியப்படுகிறது.
ஆனால் அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்து அறையிலிருந்து கிளம்பிச் சென்றார்..
இந்நிலையில், இரவுநேர உணவுக்குச் செல்வதற்கு முன்பு ஹோட்டல் அறையில் அவர்களைச் சந்திக்க அப்பெண் இணங்கினார்.
அவர் கட்டிலில் அமர்ந்துகொண்டு மதுபானம் அருந்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பிறகு அப்பெண் சுயநினைவு இழந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அந்த ஆடவர்கள் அவருடன் பாலியல் உறவு கொண்டதாக நம்பப்படுகிறது.
பிறகு அப்பெண்ணை அவர் தங்குமிடத்துக்கு அந்த 50 வயது ஆடவர் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகச் சந்தேகம் ஏற்பட்டு அப்பெண் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் அதையடுத்து காவல்துறையினர் அவருடன் விசாரணை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அவ்விரு ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.

