தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விரைவான துணைப் பேருந்து சேவை தெம்பனிசில் தொடங்குகிறது

2 mins read
833afd0c-9908-4f21-a004-9f96c80e394b
தற்போதைய துணைப் பேருந்துச் சேவை எண் 298க்கு உறுதுணையாக புதிய விரைவுப் பேருந்து சேவை அமையும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் விரைவாகச் செல்லக்கூடிய முதல் துணைப் பேருந்து சேவை தெம்பனிஸில் இருந்து தொடங்கப்படுகிறது.

298X எண் கொண்ட அந்தப் பேருந்துச் சேவை வருகிற டிசம்பர் 9ஆம் தேதி அறிமுகம் காண்கிறது.

தெம்பனிஸ் நகர மையத்திற்கும் தெம்பனிஸ் எம்ஆர்டி நிலையம் போன்ற முக்கிய போக்குவரத்து நிறுத்தங்களுக்கும் குடியிருப்பாளர்கள் விரைவாகச் செல்லும் வகையில் ஒருசில பேருந்து நிறுத்தங்களுடன் அச்சேவை செயல்பட உள்ளது.

தெம்பனிஸ் நார்த், தெம்பனிஸ் சென்ட்ரல், தெம்பனிஸ் வெஸ்ட் ஆகிய பகுதிகளுக்குச் சேவையாற்றி வரும் துணைப் பேருந்துச் சேவை எண் 298க்கு உறுதுணையாக புதிய விரைவுப் பேருந்து சேவை அமையும்.

“பேருந்து எண் 298 செல்லக்கூடிய அதே வழித்தடத்தில் இயங்கும் புதிய விரைவுப் பேருந்து, குறிப்பிட்ட ஒருசில நிறுத்தங்களில் மட்டுமே நிற்பதால் விரைவான பயணத்தை அனுபவிக்கலாம்,” என்று 298X விரைவு துணைப் பேருந்தை இயக்க உள்ள எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் திங்களன்று (நவம்பர் 18) கூறியது.

இருப்பினும், அந்த விரைவுப் பேருந்துச் சேவை வார நாள்களில் உச்சநேரத்தின்போது மட்டுமே இயங்கும் என எஸ்பிஎஸ் டிரான்சிட் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

காலை 6.30 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் இயங்கும் அந்தப் பேருந்துப் பயணத்துக்கு, வழக்கமான துணைப் பேருந்துச் சேவை கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், எவ்வளவு நேர இடையில் அடுத்தடுத்த பேருந்துகள் வந்து செல்லும் என்பதையும் எந்த அளவுக்கு வேகத்துடன் அவை செல்லும் என்பதையும் அந்த நிறுவனம் தெரிவிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

பயண நேரம் குறையும்: அமைச்சர்

தெம்பனிஸ் குழுத் தொகுதி எம்பியும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி புதிய பேருந்து சேவை பற்றி தமது ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“ஒருசில பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே நிற்பதால், புதிய சேவை பயண நேரத்தைக் குறைப்பதோடு குடியிருப்பு வட்டாரங்களுக்கு இடையிலான தொடர்பை மேம்படுத்தும்,” என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்