இன, சமய ரீதியாக கசப்புணர்வைத் தூண்ட முயன்றதாக சிங்கப்பூர் இசைக்கலைஞர் சுபாஷ் நாயர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டன.
சுபாஷ் கோவிந்த் பிரபாகர் நாயர் எனும் முழுப் பெயரைக் கொண்டுள்ள இவர்மீது 2019 ஜூலை - 2021 மார்ச் காலகட்டத்திற்கு இடையே நடந்த சம்பவங்களின் தொடர்பில் சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.
31 வயதான சுபாஷும் அவரது சகோதரி பிரீத்தி நாயரும் எழுதிய ஒரு பாடல் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அப்பாடல் வரிகள் சீனர்கள் தொடர்பில் தகாத சொற்களைக் கொண்டிருந்ததாகத் கூறப்பட்டது.
இதற்காக, காவல்துறை அவருக்கு ஈராண்டு காலத்திற்கு நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும், அவர் சமூக ஊடகம் வழியாக மீண்டும் தகாத கருத்துகளைத் தெரிவித்ததாக கூறப்பட்டது.
தன்மீதான நான்கு குற்றச்சாட்டுகளையும் மறுத்த சுபாஷ், தமது செயல்களுக்கு விளக்கமும் அளித்திருந்தார்.
இருப்பினும், சுபாஷின் விளக்கங்களை நிராகரித்தார் மாவட்ட நீதிபதி ஷைஃபுடின் சருவான்.
சில சமூகங்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதையும், மற்ற சில சமூகங்கள் சாதகமான முறையில் நடத்தப்படுவதையும் சுபாஷின் சொற்கள் கோடிகாட்டுவதாக நீதிபதி கூறினார்.
சுபாஷுக்கு பின்னொரு தேதியில் தண்டனை விதிக்கப்படும்.