தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இசைக் கலைஞர் சுபாஷ் நாயருக்கு 6 வாரங்கள் சிறை

2 mins read
441cf7aa-5158-46af-bc0c-f6e80392d91b
சுபாஷ் நாயர், மாவட்ட நீதிபதி ஷைஃபுடின் சருவான் ஜூலையில் தம்மைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்ததற்கு முன்னர் வழக்கு விசாரணையை எதிர்நோக்கியிருந்தார்.   - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உள்ளூர் இசைக் கலைஞர் சுபாஷ் நாயருக்கு ஆறு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வெவ்வேறு இன, சமயக் குழுக்கள் இடையே கசப்புணர்வைத் தூண்ட முயன்றதாக அவர்மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

சுபாஷ் கோவிந்த் பிரபாகர் நாயர் எனும் முழுப் பெயரைக் கொண்டுள்ள அந்த இசைக் கலைஞர், மாவட்ட நீதிபதி ஷைஃபுடின் சருவான் ஜூலையில் தம்மைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்ததற்கு முன்னர் வழக்கு விசாரணையை எதிர்நோக்கியிருந்தார்.

முதல் குற்றச்சாட்டு ‘சிட்டி ரிவைவல்’ தேவாலயத்தின் நிறுவனர் ஜேய்மி வோங்கும் சமூக ஊடகப் பிரபலம் ஜோவனா தெங்கும் வெளியிட்ட காணொளி தொடர்பானது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் நாயர் இன்ஸ்டகிராமில் செய்தி ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

அதிகாரிகள் மலாய் முஸ்லிம்களை இலக்காகக் கொண்டிருப்பதையும், கிறிஸ்தவச் சீனர்களுக்கு அதிக சலுகைகள் கிடைப்பதையும் அவரது செய்தி கோடிகாட்டுவதாக அரசாங்கத் தரப்புத் துணை வழக்கறிஞர்கள் கூறினர்.

இவ்வாண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி வழக்கு விசாரணையின் முதல் நாளன்று, அச்செய்தியை வெளியிட்டதை நாயர் ஒப்புக்கொண்டார். அச்செய்தி இன, சமய ரீதியாக உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது என்று அரசாங்கத் தரப்பு கூறியது.

இருப்பினும், சிங்கப்பூரில் உள்ள வெவ்வேறு இனங்களுக்கும் சமயங்களுக்கும் இடையே கசப்புணர்வைத் தூண்டும் எண்ணத்தில் அதனைச் செய்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நாயர் மறுத்தார்.

நாயரின் இரண்டாவது, மூன்றாவது குற்றச்சாட்டுகள் மற்றோர் இன்ஸ்டகிராம் பதிவு தொடர்பானவை.

நான்காவது குற்றச்சாட்டு யூடியூபில் வெளியிடப்பட்ட பாடல் தொடர்பானது. அப்பாடல் வரிகள் சீனர்கள் தொடர்பில் தகாத சொற்களைக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.

நாயரின் வழக்கறிஞர் சுவாங் விஜயா தமது கட்சிக்காரர் தாம் குற்றமற்றவர் என்று கூறிவருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தமது கட்சிக்காரர் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யத் திட்டமிடுவதாகவும் திரு சுவாங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்