30 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சிங்கப்பூர் நீர்ப்பகுதியில் அரிய வகை மீன்

30 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சிங்கப்பூர் நீர்ப்பகுதியில் அரிய வகை மீன்

2 mins read
80aa74da-77f2-4049-b7e9-4ec4b9d41518
2022ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி பிடோக் படகுத்துறைக்கு அருகில் உள்ள நீர்ப்பகுதியில் காணப்பட்ட அருகிவரும் ‘போமவுத் கித்தார்ஃபிஷ்’. - படம்: லிசா ஒஷியாஃபி

உலக அளவில் மிக அருகிவரும் நிலையில் உள்ள ‘போமவுத் கித்தார்ஃபிஷ்’ (bowmouth guitarfish) மீன், கிட்டத்தட்ட 30 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சிங்கப்பூர் நீர்ப்பகுதியில் அதிகாரபூர்வமாகக் காணப்பட்டுள்ளது.

அந்த மீன் செல்வந்தர் ஜெஃப் பெஸோஸ், ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ இருவரின் சிறப்பு கவனத்தைப் பெற்றது.

சிங்கப்பூரின் ஒரே இயற்கை வரலாற்று அருங்காட்சியகமான லீ கொங் சியான் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், அந்த மீன் காணப்பட்டது குறித்த அறிக்கையை அண்மையில் வெளியிட்டது.

“நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்,” என்று ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையின் இணை ஆசிரியரும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் துறையின் ஆய்வு உதவியாளருமான மரியம் கொலக்கோடன், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

அந்தக் காணொளியைச் சமூக ஊடகத்தில் பதிவிட்ட பயனரிடமிருந்து பெறப்பட்ட காட்சியில், அந்த உயிரினத்தின் மங்கலான நிழல் வடிவம் பதிவாகியிருந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

2022 அக்டோபர் 29ஆம் தேதி, பிடோக் படகுத்துறையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள், 1.5 மீட்டர் முதல் 2 மீட்டர் நீளமுள்ள அந்த உயிரினத்தைக் கண்டு படம்பிடித்தனர்.

மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை நீரில் உலா வந்த அந்த மீன், பின்னர் நீந்திச் சென்றது. அதனை மரியம் கொலக்கோடனுடன் இணைந்து கடல்சார் உயிரியலாளர் ஸீஹான் ஜாஃபர், சிங்கப்பூர் மீன்வளச் சங்கத்தின் இணை நிறுவனர் லின் ஜியாயுவான் ஆகிய சக ஆசிரியர்கள் ஆவணப்படுத்தினர்.

‘ரைனா’ எனும் திருக்கை மீன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரே எஞ்சிய உயிரினமாக அது இருப்பதால், போமவுத் கித்தார்ஃபிஷ் மீன் இனம் அழிந்தால், 88 மில்லியன் ஆண்டுகள் பழைமையான பரிணாம வரலாறு முற்றிலும் அழிந்துவிடும் என 2024ஆம் ஆண்டின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்
திருக்கை மீன்சிங்கப்பூர்கடல்