நிலவுக்கு அருகே சனிக்கிரகம் அருகில் இருப்பது போல பூமியிலிருந்து வானத்தில் காணப்பட்டிருந்ததை வியாழக்கிழமை (ஜூலை 25) அதிகாலையில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் காட்டுகின்றன.
இந்தக் கோள் ‘இணைவு’, 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இடம்பெறும் அரிய நிகழ்வு என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வானவியல் படப்பிடிப்பில் ஆர்வம் உள்ளவரான தமிழ் முரசு வாசகர் அ. கண்ணன், இந்த அரிய நிகழ்வைக் காண்பிக்கும் சில நிழற்படங்களை உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் காலை 4.30 மணியளவில் எடுத்தார்.
பொதுவாக மற்ற கிரகங்கள் நிலவுடன் இணைவது போன்ற தோற்றம் பூமியிலிருந்து அவ்வப்போது தென்பட்டாலும் இந்த ‘இணைவு’, 20 ஆண்டுகளில் காணாத ஒன்று என்று திரு கண்ணன் தெரிவித்தார்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் தகவல்கள் படி, பூமியைவிட சனிக்கிரகம் ஒன்பது மடங்கு அகலமானது.
பூமியிலிருந்து நிலவு, ஏறக்குறைய 384,400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சனிக்கிரகம் கிட்டத்தட்ட 1.2 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
திரு கண்ணனைப் போல் வானவியல் ஆர்வலர்கள் சிலர், இந்த நிகழ்வைக் காட்டும் படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தனர்.

