புக்கிட் தீமா விரைவுச்சாலையில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2) அதிகாலை இரு மோட்டார்சைக்கிள்கள் மோதியதையடுத்து அரியவகைக் கடமான் ஒன்று உயிரிழந்ததாக தேசியப் பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் மோட்டார்சைக்கிளோட்டிகள் இருவருக்கும் காயமில்லை என்று அது கூறியது.
விபத்து நடந்த இடத்துக்குக் கழக ஊழியர்கள் சென்றபோது அந்த மான் ஏற்கெனவே மாண்டுவிட்டது தெரியவந்தது.
‘சிங்கப்பூர் ரோட் ஆக்சிடென்ட்.காம்’ இணையத்தளத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் தொடர்பான காணொளி பதிவேற்றப்பட்டது.
அதில், மோட்டார்சைக்கிள் ஒன்று அந்த மான் மீது மோதுவதும் சாலையோரம் சுருண்டு விழுந்த மான் மீது மற்றொரு மோட்டார்சைக்கிள் மோதுவதும் பதிவாகியுள்ளது.
மூன்றாவதாக வந்த மோட்டார்சைக்கிளோட்டி ஒருவாறாகச் சமாளித்து வாகனத்தை நிறுத்திவிட்டார்.
காடுகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் விலங்குகள் சாலையைக் கடக்க நேரிடலாம் என்பதால் கவனத்துடன் வாகனம் ஓட்ட வேண்டியதன் அவசியத்தை தேசியப் பூங்காக் கழகம் வலியுறுத்தியது.
காயமடைந்த விலங்குகளைப் பொதுமக்கள் எதுவும் செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
உடனடி மீட்பு தேவைப்படும் நேரங்களில் 1800 476 1600 எனும் 24 மணி நேரத் தொலைபேசி எண்ணில் உதவி கோரும்படி கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.