மண்டாய் வட்டாரத்தில் சாலையைக் கடக்க முயன்ற கடமான் (Sambar deer) ஒன்று விபத்துக்குள்ளாகி மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாரியும் மோட்டார்சைக்கிளும் மோதிய விபத்தில் சிக்கி அந்த மான் உயிரிழந்தது.
மண்டாய் அவென்யூவை நோக்கிச் செல்லும் மண்டாய் ரோட்டில் நடந்த விபத்து குறித்துக் காலை 6.35 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
சம்பவத்தை அடுத்து 66 வயது மோட்டார்சைக்கிளோட்டி சுயநினைவுடன் உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சம்பவ இடத்தில் மானின் உடலைக் கண்டதாகவும் பின்னர் அதனை அப்புறப்படுத்தியதாகவும் தேசியப் பூங்காக் கழகம் சொன்னது.
லவ் சம்பார் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான பதிவில், அந்த ஆண் கடமான் வெட்டவெளியிலிருந்து மண்டாய் ரோட்டைக் கடந்து அப்பர் சிலேத்தார் நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள வனப்பகுதிக்குச் செல்ல முயன்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு (2024) சாலை விபத்தில் இவ்வகை மான் உயிரிழந்த இரண்டாவது சம்பவம் இது என்று விலங்கு நல ஆய்வு, கல்வி அமைப்பு (Acres) கூறியது.
வனவிலங்குகள் சாலையைக் கடக்கும் வாய்ப்புள்ள மண்டாய் போன்ற வட்டாரங்களில் விழிப்புடன் வாகனங்களை ஓட்டும்படி தேசியப் பூங்காக் கழகம் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதேவேளையில் காயமுற்ற விலங்குகளைக் கண்டால் அவற்றைத் தொடாமல் ‘ஏக்கர்ஸ்’ அமைப்பின் 1800 476 1600 எனும் 24 மணி நேரத் தொலைபேசி எண்ணுக்கு அழைக்கும்படியும் அது கேட்டுக்கொண்டுள்ளது.