ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் கரை ஒதுங்கிய அரிய வகை ‘ஹாக்ஸ்பில்’ கடல் ஆமை

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் கரை ஒதுங்கிய அரிய வகை ‘ஹாக்ஸ்பில்’ கடல் ஆமை

2 mins read
c5cf4f65-5b06-4bdc-b53a-852aa39008eb
தேசியப் பூங்காக் கழக ஊழியர்கள் ஜூன் 22ஆம் தேதி மாலை 5 மணியளவில் அரிய வகை ஆமை கரையொதுங்கியிருந்ததைக் கண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

உலக அளவில் அருகிவரும் ‘ஹாக்ஸ்பில்’ வகைக் கடல் ஆமை ஒன்று, திங்கட்கிழமை (ஜூன் 22) மாலை ஈஸ்ட் கோஸ்ட் பூங்காக் கடற்கரையில் கரை ஒதுங்கியது.

சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டுக்கான ஆமைகளின் முட்டையிடும் பருவம் (Nesting Season) தொடங்கியுள்ள நிலையில், தேசியப் பூங்காக் கழக ஊழியர்கள் திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் அந்த ஆமை கரையொதுங்கியிருந்ததைக் கண்டனர்.

கடற்கரை மணலில் முட்டையிடுவதற்காக அந்தப் பெண் ஆமை குறைந்தது நான்கு முறை முயற்சி செய்தது. ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் அது முட்டையிடாமலேயே ஏமாற்றத்துடன் மீண்டும் கடலுக்குள் திரும்பியதாகக் கூறப்பட்டது.

ஆமை கடலுக்குள் திரும்புமுன், கழகத்தின் தேசியப் பல்லுயிர் நிலைய ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, அதன் துடுப்புகளில் தனித்துவமான அடையாள வில்லைகளைப் பொருத்தினர்.

ஆமையின் துடுப்புகளில் அடையாள வில்லைகள் பொருத்தப்பட்டன.  
ஆமையின் துடுப்புகளில் அடையாள வில்லைகள் பொருத்தப்பட்டன.   - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இதற்கிடையே, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் லிண்ட்சே டனாபே, அந்த ஆமையின் மரபணுக்களை ஆய்வு செய்வதற்காக அதன் திசு மாதிரிகளைச் சேகரித்தார்.

ஆமையின் மரபணுக்களை ஆய்வு செய்வதற்காக அதன் திசு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
ஆமையின் மரபணுக்களை ஆய்வு செய்வதற்காக அதன் திசு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“இந்தத் தரவுகள் கடல் ஆமைகளின் ஆரோக்கியம் குறித்தும், காலநிலை மாற்றத்தால் அவை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஆராய விஞ்ஞானிகளுக்குப் பெரிதும் உதவும்,” என்றார் அவர். மேலும், அந்த ஆமையின் ஓட்டின்மீது ஒட்டியிருந்த கடல் சிப்பிகளையும் (Barnacles) அவர் அகற்றினார். ஆமை எளிதாக நீந்துவதற்கு உதவுவது அதன் நோக்கம்.

பறவையின் அலகைப் போன்ற மூக்கைக் கொண்ட இந்த ‘ஹாக்ஸ்பில்’ ஆமைகள், பவளப்பாறைகளைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சிங்கப்பூர்க் கடற்கரைகளில் மக்கள் நடமாட்டமும் வெளிச்சமும் அதிகமாக இருப்பதால், ஆமைகள் முட்டையிட அச்சப்படுவதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் கடலுக்குத் திரும்பிய ‘ஹாக்ஸ்பில்’ வகைக் கடல் ஆமை.
மீண்டும் கடலுக்குத் திரும்பிய ‘ஹாக்ஸ்பில்’ வகைக் கடல் ஆமை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடற்கரையில் இத்தகைய ஆமைகளைக் காண நேர்ந்தால் பொதுமக்கள் தள்ளி நின்று அமைதி காக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். வெளிச்சம் காட்டி அவற்றைப் பயமுறுத்த வேண்டாம் என்று வலியுறுத்திய அதிகாரிகள், உடனடியாக 1800-471-7300 என்ற எண்ணில் தேசியப் பூங்காக் கழகத்துக்குத் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்