வெஸ்ட் கோஸ்ட் பார்க் அருகே உள்ள கடற்பகுதியிலிருந்து ஐந்து அரியவகை அல்பினோ சிவப்பு நிற ஆமைகள் மீட்கப்பட்டன.
ஏஷியாஒன் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த ஏக்கர்ஸ் எனப்படும் விலங்குநல ஆய்வு, கல்வி அமைப்பு, பொதுமக்களிடமிருந்து தகவல் வந்ததையடுத்து செப்டம்பர் 27ஆம் தேதி ஆமைகள் மீட்கப்பட்டதாகக் கூறியது.
இவற்றை யாராவது கடல் நீரில் கைவிட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அனைத்து ஆமைகளும் ஆரோக்கியமாக இருந்தாலும் அவற்றின் ஓடுகளில் பழைய காயங்கள், ஆறிய வடுக்கள், உடைந்த நகம் ஆகியவை காணப்பட்டதாக ஏக்கர்ஸ் குறிப்பிட்டது.
“இவை கடல் நீரில் வாழ்வதற்கு ஏற்றவை அல்ல. கடலில் விட்டுவிட்டால் உப்பு நீரால் கடுமையான நீரிழப்பு ஏற்பட்டு இறுதியில் இறப்பிற்கு வழிவகுக்கும்,” என்று அந்த அமைப்பு எச்சரித்தது.
பொதுவாக, இத்தகைய ‘சிவப்பு காது ஸ்லைடர்’ ஆமைகளை ஏக்கர்ஸ் மீட்பதோ ஏற்றுக்கொள்வதோ இல்லை.
இருந்தாலும் விலங்குகளைப் பாதுகாக்கவும் அவை மேற்கொண்டு துன்பப்படுவதையும் காயமடைவதையும் தடுக்கவும் இந்த விவகாரத்தில் அது தலையிட்டுள்ளது.
தற்போது இவற்றைத் தத்தெடுக்க விரும்புவோரை ஏக்கர்ஸ் தேடி வருகிறது.
வளர்ப்புப் பிராணிகளைப் பராமரிக்க முடியாமல் அவற்றைச் சிங்கப்பூரின் இயற்கைச் சூழலில் கைவிடக் கூடாது; அதற்குப் பதிலாக, உரிமையாளர்கள் பொருத்தமான உதவி அல்லது வேறு வீடுகளில் மறுவாழ்வு அளிப்பதற்கான வழிகளைத் தேட வேண்டும் என்று அது அறிவுறுத்தியது.
