மெக்ரிட்சி நீர்த்தேக்கத்தில் சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 1) மிகவும் அரிதானதும் நச்சுத்தன்மை கொண்டதுமான நீலக் கழுத்து நீர்க்கோலிப் பாம்பு ஒன்று காணப்பட்டது. விலங்கு ஒன்றின் கால்கள் அதன் வாயிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்ததைக் காட்டும் படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அந்தப் பாம்பு தவளை ஒன்றை விழுங்கியிருக்கக்கூடும் என்றும் அதன் அருகில் செல்ல வேண்டாம் என்றும் இணையவாசிகள் பதிவிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த தேசியப் பூங்காக் கழகம், மெக்ரிட்சி இயற்கைப் பாதையில் பாம்பு தென்பட்டதை உறுதிப்படுத்தியதோடு, பொதுமக்கள் அதன் அருகில் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இந்த வகை பாம்புகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை என்பதை கழகம் உறுதிப்படுத்தியது.
இவை பொதுவாக வனப்பகுதிகளிலும் சதுப்புநிலங்களிலும் காணப்படும் என்று கழகத்தின் வனவிலங்கு நிர்வாகப் பிரிவின் குழும இயக்குநர் கூறினார். இது முழுமையாக வளர்ச்சி அடைந்த நிலையில் ஏறத்தாழ 75 சென்டிமீட்டர் நீளம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆரஞ்சு கலந்த பழுப்பு நிற உடலும், நீல நிறக் கழுத்தும் கொண்ட இவ்வகை பாம்பு சிங்கப்பூரில் அருகி வரும் உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. வனப்பகுதியில் பாம்புகளைக் கண்டால் மக்கள் பதற்றமடையாமல் மெதுவாகப் பின்வாங்க வேண்டும் என்றும் அவற்றைப் பிடிக்க முயலக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வனவிலங்குகள் தொடர்பான உதவிக்கு 1800-476-1600 என்ற எண் மூலம் தேசியப் பூங்காக் கழகத்தின் விலங்குப் பிரிவு மையத்துடன் தொடர்புகொள்ளலாம்.


