சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் (எஸ்ஐடி) உள்ள உணவு நிலையத்தில், ஒரு கடையின் காசாளர் சாதனத்தில் ஓர் எலி இருப்பது படம்பிடிக்கப்பட்டதை அடுத்து, அங்கு உணவுச் சுகாதாரக் குறைபாடுகள் ஏற்பட்டிருக்கலாம் எனச் சிங்கப்பூர் உணவு அமைப்பு விசாரித்து வருகிறது.
பரவலாகக் காணப்பட்ட இந்தக் காணொளி, செப்டம்பர் 26ஆம் தேதி ரெடிட் தளத்தில் பகிரப்பட்டது.
செப்டம்பர் 30 அன்று, உணவு நிலைய நடத்துநரான ஃபுட்கில், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, செப்டம்பர் 25ஆம் தேதி, அதன் உணவுக் கடை செயல்படாத நேரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறியது.
அன்றிரவு உணவு நிலைய நடத்துநருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்குக் கடையில் கிருமி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
பூச்சிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும், கூடுதல் எலிப் பொறிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், வாரத்திற்கு ஒரு முறை என உட்சோதனைகள் அதிகரித்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. நச்சுணவு தொடர்பான சம்பவங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த உணவு நிலையம், பசுமையான புதர்கள் மற்றும் வனவிலங்குகளால் சூழப்பட்டுள்ளது. பொங்கோலில் உள்ள எஸ்ஐடி வளாகத்தில் அமைந்துள்ள இந்த உணவு நிலையத்தில் குறைந்தது 13 கடைகள் செயல்படுகின்றன என்று ஃபுட்கில் கூறியது.
செப்டம்பர் 26ஆம் தேதி உணவு அமைப்பும் தேசியச் சுற்றுப்புற வாரியமும் நடத்திய சோதனைகளில், எலி காணப்பட்ட கடை உட்பட அனைத்துக் கடைகளும் நல்ல நிலையில் இருப்பதைக் கண்டறிந்ததாக ஃபுட்கில் மேலும் தெரிவித்தது.
இச்சம்பவம் தொடர்பில் தான் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சிங்கப்பூர் உணவு அமைப்பு செப்டம்பர் 29ஆம் தேதி வெளியிட்ட தனது அறிக்கையில் கூறியது.

