தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தர்மனை விரும்பும் மக்கள் என்னையும் விரும்பட்டுமே: கலா மாணிக்கம்

2 mins read
அதிபர் தர்மனைப் பற்றி தொகுதிக் குடியிருப்பாளர்கள் தொடர்ந்து புகழ்வதாக ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சியின் வேட்பாளர் கலா மாணிக்கம் தெரிவித்துள்ளார்.
e46a7805-3dbd-44cf-a14f-a1391b4c1c63
ஜூரோங் சென்ட்ரல் தனித்தொகுதியில் போட்டியிடும் சிவப்புப் புள்ளிக் கட்சியின் வேட்பாளர் கலா மாணிக்கம், ஜூரோங் சென்ட்ரல் பிளாசாவிலுள்ள ஈரச்சந்தையில் வாக்கு சேகரித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இருப்பதால் அரசாங்கம் நலிவடையாது என்றும் மாறாக அது, அந்தக் கட்சிகளின் புதிய யோசனைகளால் வலுவடையும் என்றும் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சியின் ஜூரோங் சென்ட்ரல் தனித்தொகுதி வேட்பாளர் கலா மாணிக்கம் தெரிவித்திருக்கிறார்.

பதற்றமிக்க இக்காலகட்டத்தில் கூடுதலான எதிர்க்கட்சிக் குரல்கள் அரசாங்கத்தை நலிவடையச் செய்யும் என்று ஃபுல்லர்ட்டன் பிரசாரக் கூட்ட உரையின்போது பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்த நிலையில், திருவாட்டி கலா அதனை மறுத்துள்ளார்.

ஜூரோங் சென்ட்ரல் பிளாசாவில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) மேற்கொண்ட தொகுதி உலாவின்போது செய்தியாளர்களிடம் பேசியபோது திருவாட்டி கலா இவ்வாறு கூறினார்.

“உண்மையில், நாங்கள் புதிய யோசனைகளைக் கொண்டுவருகிறோம்; புதிய பணிகளில் ஒத்துழைக்கிறோம். பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து எங்களாலும் விவாதிக்க முடியும். இதனால் சிங்கப்பூரர்களுக்கு மிகுந்த நன்மை விளையும்,” என்று திருவாட்டி கலா கூறினார்.

முன்னதாக சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின்கீழ் நீ சூன் குழுத்தொகுதியில் போட்டியிட்ட 57 வயது திருவாட்டி கலா, எதிர்க்கட்சிகளால் அரசாங்கம் இன்னும் சிறந்ததாகும் என அவர் வாதிட்டார்.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூவின் ஏப்ரல் 28 பேரணி உரை குறித்து கருத்து கேட்டதற்கு, அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்தின் உபரித்தொகையின் ஒரு பகுதி, எல்லோர்க்கும் பகிர்ந்தளிக்கப்படலாம் என்ற யோசனையை முன்வைத்தார்.

வரவுசெலவுத் திட்ட உபரித்தொகையிலிருந்து, அனைத்து மக்களுக்கும் 200 வெள்ளி ஈவுத்தொகை வழங்கப்படலாம் என்று ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஜூரோங் குழுத்தொகுதியை முன்னதாக வழிநடத்திய அதிபர் தர்மன் சண்முகரத்னத்தைப் போலத் திகழ விரும்புவதாகத் திருவாட்டி கலா கூறினார்.

“வட்டாரவாசிகள் இன்றளவும் அவரை உயர்வாக மதிக்கின்றனர். திரு தர்மன் நல்லவர், பரிவுமிக்கவர் என்று அவர்கள் கூறி வருகின்றனர். நான் செல்ல விரும்பும் பாதை இதுதான். தர்மனை விரும்பும் மக்கள் என்னையும் விரும்பட்டுமே,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்