பேரணி உரை அறிவிப்புகளுக்கு மக்கள் வரவேற்பு

3 mins read
050c3d9d-6307-46e8-a0fe-6c7c5f2997e4
பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதில் பிரதமர் ஆழமான நம்பிக்கை கொண்டுள்ளது அவரது உரையில் வெளிப்பட்டது என்று செம்பாவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விக்ரம் நாயர் தெரிவித்தார்.

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் தந்தையருக்குமான விடுப்பு குறித்து தாம் முன்பு நாடாளுமன்றத்தில் பேசியதைச் சுட்டிக்காட்டிய அவர், “தாய்மார்களுக்கான கூடுதல் விடுப்புடன், பெற்றோர்களுக்குக் கூடுதலாகப் பத்து வார பகிர்வு விடுப்பு வழங்கப்படுவது அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்,” என்றார்.

இதற்கிடையே, வணிகம், குடும்பங்கள், வீடமைப்பு, கல்வி ஆகியவை தொடர்பில் திரு வோங் அறிவித்த மாற்றங்களால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து பேரணி உரையை நேரடியாகக் கேட்ட சிலர், தமிழ் முரசிடம் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

வணிக மாற்றங்கள், திறன் மேம்பாடு

வேலையிலிருந்து விடுப்பு எடுத்து முழுநேர ஓய்வு எடுத்துக்கொள்பவர்கள், மாதத்திற்கு $3,000 உதவித்தொகை பெற்று அதிகபட்சமாக 24 மாதங்களுக்கு $72,000 வரை பெறுவதை வரவேற்பதாக மனிதவள நிர்வாகியும் பொங்கோல்-ஷோர் இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் துணைத் தலைவருமான கெளரி சுப்ரமணியம், 45, கூறினார்.

குறிப்பாக, வேலை தேடுவோருக்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆதரவுத் திட்டம் மூலம் ஆறு மாதங்கள் வரை $6,000 வழங்கப்படுவதை தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் வரவேற்பதாக அதன் தலைவர் கே.தனலட்சுமி தெரிவித்தார்.

“வேலையிழந்தோர் துவண்டுபோகாமல் இருப்பதற்குத் தேவைப்படும் மீள்திறனை வளர்க்க இந்தத் திட்டம் கைகொடுக்கும்,” என்றார் அவர்.

பொருளியல் சூழல் அதிகம் மாறும் சூழ்நிலையிலும் வசதி குறைந்தவர்களுக்கும் நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கும் சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டு, பொதுப் பயனீட்டுச் சலுகைகள் கொடுக்கப்படுவது நிம்மதி அளிப்பதாக கிளமெண்டி இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் தலைவர் தெய்வானை சின்னப்பன், 69, தெரிவித்தார்.

பிள்ளை பெற கூடுதல் ஆதரவு 

விருப்பத்தின் பேரில் எடுக்கப்படக்கூடிய தந்தைகளுக்கான அரசாங்கம் வழங்கும் சம்பளத்துடன் கூடிய கூடுதலான இரண்டு வார மகப்பேற்று விடுப்பு 2025 ஏப்ரல் 1 முதல் கட்டாயமக்கப்படுவது மகிழ்ச்சி தருவதாகச் சொன்னார் அரசாங்க ஊழியராகவும் புதிய தந்தையுமான அரஷ் ஷா, 28. 

“பிள்ளைப் பராமரிப்பு என்பது தாயார்களுக்கு மட்டும் உரியதன்று என்பதை அரசாங்கம் அங்கீகரிப்பதைப் புதிய அறிவிப்பு காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.

இதனை ஆமோதித்த அடித்தளத்தலைவர் சுரேன் சந்திரசேகரன், 34, புதிய முடிவு முற்போக்கானது எனப் பாராட்டினார். புதிய தந்தையர் பலர் வேலையிடத் தேவைகளால் விடுப்பு எடுக்கத் தயங்குகின்றனர் என்பது உண்மை என்றும் அவர் சொன்னார்.

வீடமைப்புக் கொள்கையில் மாற்றங்கள்

கொவிட்-19 கிருமித்தொற்றால் கட்டி முடிக்கத் தாமதமான ‘பிடிஓ’ எனப்படும் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகள அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று அடித்தளத் தலைவரும் எஸ்எம்ஆடி தொழிற்சங்க உறுப்பினருமான பிரவிதா சுபின் தெரிவித்தார். 

தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் வீடுகளை பெற்றோரின் வீடுகளுக்கு அருகில் வாங்க ஆசைப்படும் ஒற்றையர்கள், திருமணமானவர்களுக்குத் தரப்படும் முன்னுரிமையையும் பெறுவர் என்ற அறிவிப்பு, காலத்தின் கட்டாயத்தை நிறைவேற்றுவதாகவுத் திருவாட்டி பிரவிதா கூறினார்.

“மக்கள்தொகை மூப்படைந்துவரும் நிலையில், சிங்கப்பூருக்கு இந்தத் தீர்வு பொருத்தமானது,”  என்றும் அவர் சொன்னார். ‘நீண்டநாள் ஆதங்கத்திற்கு விடிவு’

தாய்மொழிப் பாடங்களில் நல்ல தேர்ச்சி பெறும் மாணவர்கள் இனி உயர்நிலை ஒன்றிலிருந்து அவற்றை எடுத்துப் படிக்க இயலும் என்ற அறிவிப்பு, ஆசிரியர் சமூகத்தினரால் மிகவும் வரவேற்கப்படுவதாக சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார் தெரிவித்தார்.

“தமிழ் ஆசிரியர் சமூகத்தின் நீண்டநாள் விருப்பத்தை இந்த அறிவிப்பு நிறைவேற்றியுள்ளது. தமிழை மேலும் ஆழமாகக் கற்று, திறன்களை வளர்க்க விரும்புவோருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்,” என்றும் திரு தனபால் கூறினார்.

இருமொழிக்கொள்கை மீது திரு வோங் வெளிப்படுத்திய கடப்பாடு மனநிறைவு அளிப்பதாகவும் திரு தனபால் கூறினார். 

“ஆசிரியர்களுடன் அரசாங்கமும் சமூகம் நேர்க்கோட்டில் பயணம் செய்வதைக் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றார் அவர் .

“இளவயதில் மேன்மையான நிலையில் தமிழைக் கற்கும் வாய்ப்பு கொடுக்கப்படுவதால் அடுத்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் தமிழ்த் திறன் அதிகம் உள்ள இளையர்கள் உருவாவதைக் காணலாம்,” என்று சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி இரா. அன்பரசு.

இதனால் தமிழ் சார்ந்த துறைகளில் கூடுதலானோர் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று அவர் கருதுகிறார்.

குறிப்புச் சொற்கள்