தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரிலும் எதிரொலிக்கும் ரூ.2000 நோட்டு விவகாரம்

2 mins read
7a58b9fe-b69d-4846-b12e-e96ab5a38b9d
படம்: ஏஎஃப்பி -

இந்தியாவின் ரூ.2000 நோட்டு பற்றிய அறிவிப்பினால் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி அலை சிங்கப்பூரிலும் பரவி உள்ளது.

இதனால் நாணய மாற்று வணிகர்களும், இந்தியாவிற்குப் பணம் அனுப்பு பவர்களும் பாதிப்படையக்கூடும் என்ற நிலையில், லிட்டில் இந்தியாவில் நாணய மாற்று வணிகர்கள் சிலர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

மோனிஷா எக்ஸ்சேஞ் உரிமையாளரான 56 வயது வேதரத்தினம் சம்மந்தம், "இந்தச் செய்தி எங்களுக்கு ஒரு இக்கட்டான சூழலை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் இப்பொழுதே பணத்தை மாற்ற விரைகிறார்கள். இடையில் மூன்று மாத கால அவகாசம் இருப் பதால் வாடிக்கையாளர்களிடம் இந்தியாவிற்குச் சென்று அங்குப் பணத்தை மாற்ற பரிந்துரைத்துள்ளேன்." என்றார்.

கொவிட்-19 தொற்று தொடங்கியதில் இருந்தே ரூ.2000 நோட்டுகளை இந்தியாவுக்கு அனுப்பும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக் கணிசமாக குறைந்து விட்டதாகப் பகிர்ந்த 'பீபல்ஸ் பார்க் மணி சேஞ்சர்' ஊழியரான ஷேக் அலாவுதீன், 62, இந்தப் புதிய மாற்றத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று நம்புகிறார்.

அப்பர் டிக்சன் சாலையில் அமைந்துள்ள நாணய மாற்றுக் கடை ஒன்றின் மேலாளரான அப்துல்லா, 34, புதிய அறிவிப்பால் ஒரு குழப்பத்தில் உள்ளார்.

"இன்று காலையே பல வாடிக்கை யாளர்கள் வந்துவிட்டனர். அச்சமாகவும் குழப்பமாகவும் இருக்கிறது. ரூ.2000 நோட்டுகள் அதிகமாக உள்ளன.

"இவை அனைத்தும் இந்தியாவில் இருக்கும் எங்கள் உறவினர்களிடம் தந்து மாற்றச் சொல்ல வேண்டும். வேறு எந்த சிறந்த வழியும் எனக்கு இப்பொழுது தோன்றவில்லை." என வருந்தினார்.

இந்நிலையில் இந்தியாவில்தான் 2000 ரூபாய் நோட்டை மாற்ற முடியும் என்றும் தனது வாடிக்கையாளர்களிடம் நாணய மாற்று வியாபாரிகள் கூறி வருகின்றனர்.

இந்தியாவில் தங்கள் குடும்ப உறுப் பினர்களுக்கு மாதா மாதம் பணம் அனுப்பும் வெளிநாட்டு ஊழியர்களும் இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை.

கட்டுமானத் துறையில் பணிபுரியும் 28 வயது மகாலிங்கம் கலைச்செல்வன், "சங்கடமாக இருக்கிறது.

ஒவ்வோர் மாதமும் நிம்மதியாக பணம் அனுப்பிக்கொண்டிருந்தேன். இப்பொழுது புதிய செய்தி கேட்டவுடன் செய்வதறியாமல் இருக்கிறேன். இந்தியாவிற்குச் சென்று முன்கூட்டியே நோட்டுகளை மாற்றிவிட வேண்டும்." என்றார்.

கட்டுமானத் துறையில் பணிபுரியும் முத்துசாமி முரளிதாஸ், 35, "இதனால் என்னைப் போன்ற நடுத்தரவாசிகள் மிகவும் சிரமப்படுவார்கள். வங்கிகளுக்குச் சென்று பணம் மாற்ற வேண்டும். இது நான் எதிர்பார்க்காத ஒன்று. இதைப் பற்றி நினைத்தாலே வருத்தமாக உள்ளது." என்று கூறியுள்ளார்.