தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மக்கள் வாய்ப்பளித்தால் சேவை செய்ய தயார்: டாக்டர் ஹமீது ரசாக்

3 mins read
8c970059-4168-4ab4-b031-63c995ddd0ab
மக்களுக்குச் சேவை செய்யத் தயாராக இருக்கும் டாக்டர் ஹமீது ரசாக். - படம்: பே. கார்த்திகேயன்

மக்களிடம் பேசும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் சிலவற்றுக்கு சமூகம் தீர்வு கண்டாலும் ஒரு சிலவற்றை நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் சென்று அங்கு விவாதித்தால்தான் அதற்கான மாற்றம் கிடைக்கும் என்று முடவியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஹமீது ரசாக் நம்புகிறார்.

பிரதமர் வோங் அண்மையில் எட்டு மக்கள் செயல் கட்சி புதுமுகங்களைக் காணொளி ஒன்றில் அறிமுகம் செய்தார். அவர்களில் 39 வயது டாக்டர் ஹமீது ரசாக்கும் ஒருவர். புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் அவர் களமிறங்குகிறார்.

மாற்றத்தைக் கொண்டு வர நம்பிக்கை மிக அவசியம் என்று கூறிய டாக்டர் ஹமீது, நல்லதை செய்ய அரசியல் ஒரு வழி என்று தெரிவித்தார்.

மக்களின் வாக்கு மிக முக்கியம் என்பதால் அவர்கள் வாய்ப்பளித்தால் பணியைத் தாம் செவ்வனே செய்யத் தயாராக இருப்பதாக உறுதி அளித்தார் டாக்டர் ஹமீது.

திங்கட்கிழமை (ஏப்ரல் 14) மாலை மக்கள் செயல் கட்சியின் வெஸ்ட் கோஸ்ட் கிளையில் செய்தியாளர்களிடம் டாக்டர் ஹமீது பேசினார்.

தமிழ் முரசிடம் பேசிய அவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

சிறிது காலம் குவீன்ஸ்டவுனில் வாழ்ந்த பின்னர் திருமணம்வரை தாமான் ஜூரோங்கில் தனது பெற்றோருடன் இருந்து வந்ததாக அவர் சொன்னார்.

முன்னர் தாமான் ஜூரோங் தொகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அதிபர் தர்மன் சண்முகரத்தினம் தனக்கு ஒரு முன்னுதாரணம் என்று டாக்டர் ஹமீது கூறினார்.

அதிபர் தர்மனின் பேச்சு, அணுகுமுறை ஆகியவற்றைப் பார்த்துத் தாம் கற்றுக்கொண்டதாகச் சொன்னார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஜூரோங் ஸ்பிரிங் பகுதியில் அதிகம் சேவையாற்றி வரும் டாக்டர் ஹமீது, அதிபர் தர்மனிடமிருந்து கற்றுக்கொண்டதைப் பயன்படுத்தி குடியிருப்பாளர்களுக்குத் தரமான வாழ்க்கைமுறையை அமைத்துத் தர நம்பிக்கை உள்ளதாகத் தெரிவித்தார்.

சமூகத் தொண்டூழியராக ஜூரோங் ஸ்பிரிங்கில் தமது பணியைத் தொடங்கி பல தொண்டூழியர்களைத் தற்போது வழிநடத்தி வரும் அவர், குடியிருப்பாளர்களின் தேவைகளைத் ஆழமாக ஆராய்ந்து வருவதாகச் சொன்னார்.

2017ல் சேவையாற்றி வந்த பிரிவில் உறுப்பினராகச் சேர விருப்பம் உள்ளதா எனத் தன்னிடம் கேட்டபோது அரசியலுக்குள் நுழைவதற்கான தமது பயணம் தொடங்கியதாக அவர் கூறினார்.

“ஜூரோங் வட்டாரத்தில் மூத்தோர் பலர் உள்ளனர். தனியாக வசிக்கும் மூத்தோருக்கு உதவுவது, குறைந்த வருமானம் இல்லாத குடும்பமாக இருந்தாலும் வீட்டில் ஒருவர் மட்டும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்குவது, சுகாதாரக் கல்வியறிவு கூட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவேன்,” என்றார் டாக்டர் ஹமீது.

குறைந்த வருமானம் இல்லாத குடும்பமாக இருந்தாலும் வீட்டில் ஒருவர் மட்டும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்க ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்திற்குச் சில மாற்றங்களைக் கொண்டு வர விரும்பும் டாக்டர் ஹமீது அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து புதிய கொள்கையை அறிமுகப்படுத்தவும் விரும்புகிறார்.

17 ஆண்டுகளுக்கு முன்னர் சமூகத்திற்கு சேவையாற்றும் பயணம் தொடங்கியதாகச் சொன்ன டாக்டர் ஹமீது, தாமான் ஜூரோங் வட்டாரத்தில் முதியோரின் எண்ணிக்கை அதிகம் என்பதால் மருத்துவ படிப்பு மேற்கொண்டு வந்த சமயத்தில் அவர் சுகாதார விவகாரங்களில் தொண்டூழியம் புரிந்தார்.

தொண்டூழியம் புரிந்து வந்தபோது குடியிருப்பாளர்கள் சிலரின் மருத்துவச் சிக்கல்களுக்கு உதவியதைப் பகிர்ந்துகொண்ட டாக்டர் ஹமீது, அது மனதிற்கு நிறைவு அளித்ததாகக் கூறினார்.

பொருளாதார பிரச்சினைகள், குறைவான வேலை வாய்ப்புகள், இந்தியச் சமூகத்தினர் ஆரோக்கியம் மீது அதிக அக்கறை கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட டாக்டர் ஹமீது தேசிய அளவில் இந்தியர்களுக்கு நீரிழிவு நோயும் உயர் ரத்த அழுத்தமும் அதிகம் இருப்பதாகச் சொன்னார்.

கிளமெண்டி வட்டாரத்தில் வசிக்கும் இந்தியர்களுடன் உரையாடும் டாக்டர் ஹமீது ரசாக்.
கிளமெண்டி வட்டாரத்தில் வசிக்கும் இந்தியர்களுடன் உரையாடும் டாக்டர் ஹமீது ரசாக். - படம்: பே. கார்த்திகேயன்

வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இலவசமாக மருத்துவ சேவை வழங்கிவந்த டாக்டர் ஹமீது, அவர்கள் உடல்நலத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை என்றார்.

குறைந்த விலை மருந்தகத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் அவர் கோவிட்-19 காலத்தில் ஊழியர்களின் தங்கு விடுதிகளுக்குச் சென்று அதிகம் சேவையாற்றினார்.

“ஒவ்வோர் மாதமும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுக்குச் சென்று மருத்துவ முகாம்களை நண்பர்களுடன் சேர்ந்து ஏற்பாடு செய்து வருகிறேன். வெளிநாட்டு ஊழியர்களின் நலனிலும் அக்கறை கொள்வேன்,” என்று டாக்டர் ஹமீது குறிப்பிட்டார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ‘இம்ப்ரோஃப்’ எனப்படும் இந்திய முஸ்லிம் நிபுணர்கள் சங்கத்தை இணைந்து நிறுவிய டாக்டர் ஹமீது, சமூக வழிகாட்டுத் திட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்.

மக்கள் செயல் கட்சியின் கொள்கைகளில் தம்மை மிகவும் ஈர்த்தது கட்சியின் உண்மைத்தன்மை என்று குறிப்பிட்டார் டாக்டர் ஹமீது.

குறிப்புச் சொற்கள்