சிங்கப்பூர் ஊழியர்களின் நிகர வருமானம் 3.4% அதிகரித்தது

2 mins read
c8ae94a7-e9a1-48b4-9ec6-a24ff306485b
கடந்த ஆண்டில் குறைந்த வருமான விகிதம், பணவீக்கம் தணிந்ததால் இவ்வாண்டு கூடியது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் இவ்வாண்டு நடுத்தர மற்றும் குறைந்த வருமானப் பிரிவில் உள்ளோரின் நிகர வருமானம் உயர்ந்துள்ளது.

பணவீக்க அடிப்படையிலான மதிப்பீட்டுக்குப் பிறகு அந்த விவரம் தெரிய வந்தது.

கடந்த ஆண்டு காணப்பட்ட எதிர்மறைப் போக்கிலிருந்து வருமான நிலவரம் மீண்டுள்ளதை மனிதவள அமைச்சு வியாழக்கிழமை (நவம்பர் 28) வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளை உள்ளடக்கிய சிங்கப்பூர்வாசிகளின் ஊழியரணி நிலவரம் தொடர்பான அமைச்சின் வருடாந்திர அறிக்கை அது.

நடுத்தர, குறைந்த வருமானப் பிரிவினருக்கு இடையிலான வருமான இடைவெளி குறைந்திருப்பதையும் அந்த அறிக்கை சுட்டியது.

நடுத்தர வருமானப் பிரிவினரின் நிகர வருமானம் இவ்வாண்டு 3.4 விழுக்காடும் குறைந்த வருமானப் பிரிவினரின் நிகர வருமானம் 4.6 விழுக்காடும் உயர்ந்துள்ளன.

மொத்த வருமானப் பிரிவினரில் குறைந்த வருமானப் பிரிவினரின் விகிதம் 20 விழுக்காடு.

இருப்பினும், இந்த விவரங்கள் முன்னோடி மதிப்பீடுகள்தான். ஆண்டு முழுமைக்குமான பணவீக்கத் தரவுகள் இனிமேல்தான் வெளியிடப்படும்.

2023ஆம் ஆண்டு அதிக பணவீக்கம் காரணமாக, நடுத்தர வருமானம் ஈட்டுவோரின் நிகர வருமான வளர்ச்சி 2.2 விழுக்காடு குறைந்தது.

அதேபோல, குறைந்த வருமானம் ஈட்டுவோரின் நிகர வருமான வளர்ச்சி 3 விழுக்காடு குறைந்தது.

வருமான வளர்ச்சி விகிதம் இவ்வாண்டு அதிகரித்ததற்கு பணவீக்கம் குறைந்தது ஒரு காரணம் என்றது அமைச்சு.

பணவீக்கத்தைக் கணக்கிடாமல் பார்த்தால், நடுத்தர நிகர வருமானம் இவ்வாண்டு $5,500ஆக இருந்தது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 5.8 விழுக்காடு அதிகம்.

அதேபோல, வருமானப் பட்டியலின் கடைசி 20 விழுக்காட்டில் இருப்போரின் நிகர வருமானம் இவ்வாண்டு 7.1 விழுக்காடு அதிகரித்து $3,026 ஆனது.

அந்த வருமானங்களில் முதலாளிகள் மத்திய சேம நிதிக்கு அளிக்கும் தொகைகளை உட்படுத்தியது. மேலும், முழுநேர ஊழியர்களுக்கான வருமான நிலவரம் அது.

படிப்படியாக உயரும் சம்பள முறையின்கீழ், குறைந்த வருமானப் பிரிவினர் இனிவரும் ஆண்டுகளில் அதிக சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் என்று அமைச்சு கூறியது.

இதற்கிடையே, வேலை செய்யும் துறைகளை மாற்றிய 25 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்ட உள்ளூர் ஊழியர்களில் 10ல் 6 பேர், குறைந்தபட்சம் 5 விழுக்காடு கூடுதல் நிகர வருமானம் ஈட்டியதாக அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

பொதுவாக, உற்பத்தித்திறன் மிகுந்த துறைகளில் அதிகத் திறனுள்ள பதவிகளுக்கு அவர்கள் மாறியது அதற்குக் காரணம். நிதி, காப்பீடு, தகவல் மற்றும் தொடர்பு போன்றவை அந்தத் துறைகள்.

துறைகளை மாற்றியோரில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பர்கள் வேலைகளில் அமர்ந்தனர்.

குறிப்புச் சொற்கள்