தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அடுத்த ஆண்டு உண்மையான ஊதிய வளர்ச்சி மேம்படும்

2 mins read
உற்பத்தித் திறன் வளர்ச்சி மேம்பட்டுள்ளது இதற்குக் காரணம்
75ba613e-39d0-4bd9-b69b-3125d32f8a75
அண்மைய காலாண்டுகளில் நிறுவனங்களின் நிதி நிலைமை வலுவடைந்திருப்பதால் வேலை உருவாக்கம் அதிகரிக்கக்கூடும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் கூறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஊழியர்களின் உண்மையான ஊதிய (real wage) வளர்ச்சி அடுத்த ஆண்டு மேம்படும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் அக்டோபர் 28ஆம் தேதி கூறியுள்ளது.

பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகான சம்பளம் உண்மையான ஊதியம் எனப்படும்.

ஊழியர்களின் உற்பத்தித் திறன் வளர்ச்சி மேம்பட்டிருப்பதும் பணவீக்கம் தணிவதும் அடுத்த ஆண்டு உண்மையான ஊதிய வளர்ச்சி உயர்வதற்குக் காரணம் என்று ஆணையம் கூறியது.

இருப்பினும், 2025ல் பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளாத வழக்கமான சம்பள உயர்வு குறைவாகவே இருக்கும். ஏற்கெனவே 2024ஆம் ஆண்டின் முற்பாதியில் அது மெதுவடைந்திருப்பதை ஆணையம் சுட்டியது.

பொதுவாக ஆட்சேர்ப்பு வலுவடையும் என்றாலும் சில பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் அவர்களின் திறன்களுக்கு ஏற்ற வேலையைப் பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கக்கூடும் என்று அது கூறியது.

ஆணையம் ஆண்டுக்கு இருமுறை வெளியிடும் பொருளியல் ஆய்வறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.

ஆட்குறைப்பு செய்யப்பட்ட நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பர்கள் (PMET) ஊழியர்களையும் வயதான ஊழியர்களையும் அது குறிப்பிட்டுக் கூறியது.

இத்தகையோர் மீண்டும் வேலையில் சேரும் விகிதம் கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முன்பிருந்த சராசரியைக் காட்டிலும் குறைந்திருப்பதாக ஆணையம் சொன்னது.

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 53.2 விழுக்காட்டு ‘பிஎம்இடி’ பிரிவினர் மட்டுமே ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஆறு மாதங்களுக்குள் மீண்டும் வேலையில் சேர்ந்தனர்.

ஒப்புநோக்க, 2015க்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடையே இந்த விகிதம் 62.6 விழுக்காடாக இருந்தது.

வேலைவாய்ப்புக்கும் ஊழியர்களின் திறன் அல்லது எதிர்பார்ப்புக்கும் இடையிலான பொருத்தமின்மை அவர்கள் தகுதிக்குக் குறைவான வேலையில் சேர வேண்டிய நிலையை ஏற்படுத்தக்கூடும் என்று ஆணையம் கூறியது.

இருப்பினும், சிங்கப்பூரில் அண்மைய காலாண்டுகளில் நிறுவனங்களின் நிதி நிலைமை வலுவடைந்திருப்பதால் அதிகமான எண்ணிக்கையில் புதிய வேலைகள் உருவாகக்கூடும் என்று ஆணையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்