அமெரிக்க நகைச்சுவைக் கலைஞர் சமி ஓபெய்டின் சிங்கப்பூர் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதன் தொடர்பில் அவர் தெரிவித்திருக்கும் கருத்துகள் முற்றிலும் கற்பனையானவை என்று சட்ட அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.
அந்தக் கலைஞரின் இரு நிகழ்ச்சிகள் இன்று (ஆகஸ்ட் 31) விக்டோரியா அரங்கில் நடைபெறுவதாக இருந்தது.
தமது நகைச்சுவை நிகழ்ச்சிக்கான படைப்புகளில் சிங்கப்பூரின் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் பல்வேறு தணிக்கைகளை வலியுறுத்தியதாகவும் இறுதியில் தமது நிகழ்ச்சிக்கான உரிமத்தை அது வழங்க மறுத்துவிட்டதாகவும் ஆகஸ்ட் 27ஆம் தேதி தமது இன்ஸ்டகிராம் பதிவில் திரு ஓபெய்ட் கூறியிருந்தார்.
அதற்கு விளக்கமளித்த திரு டோங், ஆணையம் எந்தவொரு தணிக்கையையும் அவரிடம் கோரவில்லை என்றும் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்படாததற்கு அதற்கான விண்ணப்பம் தாமதமாக வந்ததே காரணம் என்றும் கூறியுள்ளார்.
இவ்விவகாரத்தில் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை அதிகாரிகள் யோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிக்லாப் தெற்கு சமூக மன்றத்திற்கு இன்று (ஆகஸ்ட் 31) வருகையளித்தபோது திரு டோங் செய்தியாளர்களிடம் பேசினார்.
முன்னதாக, திரு ஓபெய்டின் பதிவுக்கு தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி மறுப்பு தெரிவித்து இருந்தது.
நிகழ்ச்சிக்கான திரு ஓபெய்டின் வசனங்களைத் திருத்துமாறு தான் கோரவில்லை என்று அது குறிப்பிட்டு இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
“எந்தவொரு கலைநிகழ்ச்சியையும் நடத்த அதற்கா விண்ணப்பம் குறைந்தபட்சம் 40 வேலைநாள்களுக்குள் செய்யப்பட வேண்டும்.
“ஆனால், திரு ஓபெய்டின் விண்ணப்பம் ஆகஸ்ட் 15 இரவு 11.57 மணிக்கு அளிக்கப்பட்டது,” என ஆணையம் விளக்கி இருந்தது.