‘பிக்கல்ட் பெர்ல் கார்லிக்’ எனப்படும் பச்சைப் பூண்டு உணவு வகை மீட்டுக்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில் சல்ஃபர் டையோக்சைட் இருப்பதைச் சிங்கப்பூர் உணவு அமைப்பு கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ‘பிக்கல்ட் பெர்ல் கார்லிக்’கைப் பொட்டலமிடும்போது அத்தகவல் தெரியப்படுத்தப்படவில்லை.
தாய்லாந்திலிருந்து வரும் 230 கிராம் ‘பிக்கல்ட் பெர்ல் கார்லிக்’ போத்தல்கள் தற்போது மீட்டுக்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட போத்தல்களில் இருக்கும் பூண்டை வரும் 2029ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதிக்குள் உட்கொள்ளவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதிகபட்ச அளவைவிடவும் அதிகமாக சல்ஃபர் டையோக்சைட் அதில் இருந்ததாக சிங்கப்பூர் உணவு அமைப்பு வெள்ளிக்கிழமை (ஜூன் 19) செய்தி அறிக்கையில் தெரிவித்தது. ‘பிக்கல்ட் பெர்ல் கார்லிக்’கை மீட்டுக்கொள்ளுமாறு அதைத் தருவிக்கும் சின்ஹுவா ஹோக் கீ டிரேடிங் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைப்பு சொன்னது.
ஏற்கெனவே வாங்கியவர்கள், சல்ஃபைட் வகைகளால் ஒவ்வாமை இருந்தால் அதை உட்கொள்ளவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே அதை உட்கொண்டவர்கள், உடல்நலம் தொடர்பில் கவலைகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறலாம்.
சந்தேகங்கள் இருக்கும் வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கிய வாடிக்கையாளரைத் தொடர்புகொள்ளலாம்.
பொதுவாக உணவு, பானங்கள் கெட்டுப்போகாமல் இருக்க அவற்றில் சல்ஃபைட் வகைகள் கலக்கப்படுவதுண்டு. பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு எந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை; ஒவ்வாமை இருப்போர் மட்டும்தான் பாதிக்கப்படக்கூடும்.

