இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அண்மையில் மோதல் ஏற்பட்டதையும், இவை போன்ற உலக நாடுகளுக்கிடையேயான மோதல்களால் அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார் பிரதமர் லாரன்ஸ் வோங்.
தமது தேசிய தினப் பேரணி உரையில் நாடுகளுக்கிடையிலான போட்டிகள் தீவிரமடையும் நிலைகுறித்துப் பேசிய அவர், ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான மோதல், ஆசிய நாடுகளில் அது ஏற்படுத்திய தாக்கத்தையும் சுட்டினார். கம்போடியா-தாய்லாந்து நாடுகளுக்கிடையிலான எல்லைப் பிரச்சினைகளையும் குறிப்பிட்டார்.
“எதிர்வரும் பாதை எளிதானதாக இருக்கபோவதில்லை. எனினும், பிறர் வடிவமைக்கும் உலகில் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல், நமது எதிர்காலத்துக்கு நாமே பொறுப்பேற்போம்,” என்றார்.
நமக்கேற்ற சிறந்த எதிர்காலத்தை, நமது செயல்கள், சொந்தத் தேர்வுகள்மூலம் வடிவமைப்போம் என்றும் கூறினார்.
சென்ற தேர்தலில் சிறப்பான வெற்றியளித்ததற்கு நன்றி கூறிய அவர், இந்தப் பொறுப்பை முக்கியமானதாகவும் தீவிரமானதாகவும் எடுத்துக்கொள்வதாகக் கூறினார்.
தொடர்ந்து, பொருளியல் தொடங்கி, இளையர்கள், மூத்தோர், எதிர்காலத் திட்டங்கள், நமது சிங்கப்பூர் எனும் உணர்வு ஆகிய ஐந்து முக்கிய அம்சங்கள் குறித்தும், சிக்கலான புதிய எதிர்காலத்தை நோக்கிய பாதையை எவ்வாறு வகுக்க முடியும் என்பது குறித்துப் பேச விரும்புவதாகவும் கூறினார்.