தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
எஸ்எம்ஆர்டி விளக்கம்

அண்மைய எம்ஆர்டி சேவைத் தடைகள் தனிப்பட்ட சம்பவங்களே

2 mins read
438edcb9-c54d-4452-91a6-bd214f541bfd
புதன்கிழமை காலை (செப்டம்பர் 17), தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் சேவைத் தடை ஏற்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த நான்கு நாள்களில் மூன்று எம்ஆர்டி சேவைத் தடைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

அவை தனிப்பட்ட சம்பவங்கள் என்றும் ஒட்டுமொத்த ரயில் கட்டமைப்புப் பிரச்சினை அல்ல என்றும் எஸ்எம்ஆர்டி ரயில் பிரிவுத் தலைவர் திரு லாம் ஷியூ காய் கூறினார்.

ரயில் சேவைத் தடைகள் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாகவும் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் புதன்கிழமையன்று (செப்டம்பர் 17) கிம் சுவான் பணிமனையில் செய்தியாளர்களிடம் திரு லாம் தெரிவித்தார்.

புதன்கிழமை காலை 7.10 மணி அளவில் சமிக்ஞை பழுது காரணமாகத் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் இரண்டு மணி நேரத்துக்கு ரயில் சேவைத் தடை ஏற்பட்டது.

ரயில் சேவை 15 நிமிடங்கள் வரை தாமதமடையும் என்று எஸ்எம்ஆர்டி முதலில் தெரிவித்திருந்தது.

ஆனால் பிறகு ஏறத்தாழ 30 நிமிடங்களுக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

சமிக்ஞை முறையை முடக்கி மீண்டும் இயக்க அவ்வாறு செய்யப்பட்டது.

இந்தச் சமிக்ஞை முறை ரயில்களுக்கு வழிகாட்டுகிறது. அத்துடன் ரயில்களுக்கு இடையிலான பாதுகாப்பான இடைவெளியை அது உறுதி செய்கிறது. மேலும் கால அட்டவணைப்படி ரயில் சேவை வழங்கப்படுவதை அது உறுதிப்படுத்துகிறது.

சமிக்ஞை முறை எதனால் பழுதடைந்தது என்பதைக் கண்டறிய நிலப் போக்குவரத்து ஆணையத்துடனும் சமிக்ஞை கருவிகளை உற்பத்தி செய்த நிறுவனத்துடனும் இணைந்து எஸ்எம்ஆர்டி விசாரணை நடத்துவதாகத் திரு லாம் கூறினார்.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை, வடக்கு-தெற்கு ரயில் பாதை, கிழக்கு-மேற்கு ரயில் பாதை, வட்ட ரயில் பாதை ஆகியவற்றுடன் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி பாதையையும் எஸ்எம்ஆர்டி நிறுவனம் இயக்குகிறது.

எஸ்எம்ஆர்டியின் ரயில் கட்டமைப்பு பலப்படுத்தப்படும் என்று திரு லாம் உறுதி அளித்தார்.

தேவைக்கு ஏற்ப புதுப்பிப்புப் பணிகளும் மேம்பாட்டுப் பணிகளும் விரைவுபடுத்தப்படும் என்றார் அவர்.

நம்பகத்தன்மையுடனான ரயில் சேவை வழங்க எஸ்எம்ஆர்டி கடப்பாடு கொண்டுள்ளதாகத் திரு லாம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்