அண்மையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர் மீது போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகளைக் கடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
36 வயது ஹெங் யோங் சின் கடந்த ஜூன் மாதம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
‘எட்டோமிடேட்’ போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகளைக் கடத்தியதாகவும் அவ்வகை போதைப்பொருளை உட்கொண்டதாகவும் வியாழக்கிழமையன்று (அக்டோபர் 2) அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
‘எட்டோமிடேட்’ கலந்த 33 மின்சிகரெட்டுகளை ஹெங் கடத்தியதாகக் கூறப்படுகிறது.
செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து ‘எட்டோமிடேட்’, ‘சி’ பிரிவு போதைப்பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
விற்பனைக்காக மின்சிகரெட் ஒன்றை ஹெங் வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் சிறையிலிருந்து ஹெங் விடுவிக்கப்பட்டதை அடுத்து, அவருக்குக் குற்றத் தவிர்ப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர் 2025ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதிக்கும் 2027ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.
ஆனால், அந்தக் கட்டுப்பாட்டை அவர் மீறியதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
செப்டம்பர் 30ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக ‘எட்டோமிடேட்’ போதைப்பொருளை ஹெங் உட்கொண்டார் என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
செப்டம்பர் 30ஆம் தேதியன்று அவர் ஈசூன் ரிங் சாலையில், காத்திப் பலதுறை மருந்தகத்துக்கு அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பிற்பகல் 1 மணிக்குச் சற்று முன்னதாக, போதைப்பொருள் கலந்த 33 மின்சிகரெட்டுகளை அவர் அங்கு கடத்தியதாக நம்பப்படுகிறது.
இந்த வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் அக்டோபர் 29ஆம் தேதி நடைபெறும்.
‘எட்டோமிடேட்’ போதைப்பொருள் கடத்தல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகளிலிருந்து பத்து ஆண்டுகள்வரை சிறைத் தண்டனையும் இரண்டு முதல் ஐந்து பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
‘எட்டோமிடேட்’ போதைப்பொருள் உட்கொண்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $20,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.