அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்பட்ட ‘மேட்குட் கிரானோலா பார்’ உணவுப் பொருள்களில் உலோகத் துகள்கள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதனால், இந்த உணவுப் பொருள்களை மீட்டுக்கொள்ளும்படி அதன் இறக்குமதியாளரான ‘ரெட்மார்ட்’ நிறுவனத்தை சிங்கப்பூர் உணவு அமைப்பு கேட்டுக்கொண்டது.
இதுதொடர்பாக டிசம்பர் 13ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வெளியிட்ட எச்சரிக்கையைத் தொடர்ந்து ‘மேட்குட் கிரானோலா பார்’ மீட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்,” எனச் சிங்கப்பூர் உணவு அமைப்புத் தெரிவித்தது.
“இவ்வாண்டு ஜனவரி மாதத்திற்கும் நவம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட எங்கள் ‘கிரானோலா பார்’ உணவுப்பொருளில் சில உலோகத் துகள்கள் இருக்கக்கூடும் என இதன் தயாரிப்பு நிறுவனமான ‘மேட்குட்’ முன்பு அறிவித்திருந்தது.
இந்தப் பொருள்களை ஏற்கெனவே வாங்கியவர்கள் அவற்றை உட்கொள்ள வேண்டாம் எனச் சிங்கப்பூர் உணவு அமைப்பு அறிவுறுத்தியது.

