தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமுதாயத்திற்குத் திருப்பித் தர முனையும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம்

3 mins read
ebe57a1f-e5e2-4e09-a8ee-12f47baa0209
நிகழ்ச்சிக்கு வந்திருந்த சட்டம் மற்றும் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை திரு அமன் குப்தாவுக்கு விருதை வழங்கினார். - படம்: மக்கள் கழகம்

சமுதாயத்துடன் நெருக்கமாக இருக்க தொண்டூழியம் ஒரு சிறந்த வழி என்று நம்புகிறார் 43 வயது அமன் குப்தா.

தனது 18 வயதிலிருந்து பலமுறை ரத்த தானம் செய்துள்ள அவர், குப்தா இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிட்டெட் எனும் நிறுவனத்தை கடந்த 11 ஆண்டுகளாக சிங்கப்பூரில் நடத்தி வருகிறார்.

குறைந்த வருமானக் குடும்பங்கள் சந்திக்கும் சவால்களை அறிந்து அவர் அவர்களுக்கு உதவிக்கரங்களை நீட்டினார்.

தனி ஒரு ஆளாக மட்டுமின்றி தனது மனைவியையும் இந்த உன்னதச் செயலில் ஈடுபடுத்தினார் அமன் குப்தா.

உயரும் வாழ்க்கைச் செலவினம் காரணமாக அக்குடும்பங்களுக்கு உதவும் வகையில் இவரது நிறுவனம் மளிகைப் பொருள்களுக்கு $18,000 மதிப்புள்ள நிதியுதவி பற்றுச்சீட்டுகளை வழங்கியுள்ளது.

மக்கள் கழகத்துடன் இணைந்து இந்த உதவியை செய்துவரும் அவர், ‘ஜலான் வித் யுவர் படி’ எனும் திட்டம் மூலம் அப்பற்றுச்சீட்டுகளை வழங்கினார்.

நிதியுதவிக்கு அப்பாற்பட்டு தனது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து வசதி குறைந்த குடும்பங்களிலிருந்து வரும் குடியிருப்பாளர்கள் ஆரோக்கியம் மிகுந்த மளிகைப் பொருள்களை வாங்க உதவி செய்தார் அமன் குப்தா.

240 குடும்பங்களுக்குப் பயனளிக்கும் விதமாக இவரது உதவி சென்றடைந்துள்ளது. மேலும், சென்றாண்டு மட்டும் அமன் குப்தாவின் நிறுவனம் ஐந்து சமூகத் திட்டங்களுக்கு $43,000க்கும் அதிகமான ரொக்கத்தை வழங்கி கிட்டத்தட்ட 2,040 குடியிருப்பாளர்களுக்கு உதவி செய்துள்ளது.

“சமுதாயப் பொறுப்பு என் ரத்தத்தில் ஊறிய ஒன்று. பிள்ளைகளும் இதைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக நான் அவர்களையும் தொண்டூழியம் செய்ய ஊக்குவித்து வருகிறேன்,” என்று சொன்னார் அமன் குப்தா, 43.

சமூகத்திற்கு தோள்தரும் இவரது முயற்சி, அண்மையில் மக்கள் கழகத்தின் சமூக உணர்வு விருது விழாவில் அங்கீகாரம் கண்டது. இந்த விழா மக்கள் கழகத்தின் நிறுவன, சமூகப் பங்காளிகளின் முயற்சிகளைப் பாராட்டும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படுகிறது.

புதன்கிழமை (30 ஜூலை) ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நடைபெற்ற விருது விழாவில் சட்ட அமைச்சரும், உள்துறை இரண்டாம் அமைச்சருமான மக்கள் கழகத் துணைத் தலைவர் எட்வின் டோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.

‘எக்சலென்ஸ்’, ‘மெரிட்’ என இரண்டு பிரிவுகளில் இந்த ஆண்டு மொத்தம் 134 விருதுகள் வழங்கப்பட்டன.

“இந்த விருதுகள் நாம் எப்படிப்பட்ட சமுதாயத்தை உருவாக்க விழைகிறோம் என்பதை நிரூபிக்கிறது. 60 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் பல சவால்களைச் சந்தித்தது. அப்போது ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்தோம். அதுதான் நாட்டின் வலுவான அடித்தளத்திற்கு வழியமைத்தது.

‘‘கொவிட்-19 போன்ற இக்கட்டான சூழ்நிலையில் நாம் ஒன்றுபட்டு இருந்தோம். நிறுவனங்களுடன் மக்கள் கழகம் அமைத்துள்ள பங்காளித்துவம் ஒரு பரிவான சிங்கப்பூரை அமைத்துள்ளது. சிங்கப்பூர் செழிக்க அதன் எதிர்காலத்தைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டார் அமைச்சர் எட்வின் டோங்.

விருது பெற்ற மற்றொரு நிறுவனமான ‘தக்ரல் கார்ப்பரேஷன் லிமிடெட்’ வடகிழக்கு வளர்ச்சி நிதிக்கு 2019லிருந்து கைகொடுத்து வருகிறது.

மவுண்ட்பேட்டன் வட்டாரத்தில் குடியிருக்கும் கிட்டத்தட்ட 1,000 வசதிகுறைந்த குடும்பங்கள் இந்நிறுவனத்தின் உதவியைப் பெற்றுள்ளனர்.

குறிப்பாக, பிள்ளைகளுக்குத் தேவையான உதவியை வழங்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டுள்ள இந்நிறுவனம் அவர்களின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் விதமாக மூன்று ஆண்டு புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளது.

வடகிழக்கு வளர்ச்சி நிதிக்கு நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் $50,000 வழங்கி வருகிறது.

இதன் மூலம் பிள்ளைகளைக் கொண்டிருக்கும் குடும்பங்கள் மூன்று மாதக் காலத்திற்குத் தேவையான பால் தூள், டயப்பர்கள் செலவை மிச்சப்படுத்த முடியும்.

“எங்களால் முடிந்தவரை எங்கெல்லாம் உதவ முடியுமோ நாங்கள் உதவி வருவோம். பிள்ளைகள்மீது நாங்கள் தற்போதைக்குக் கவனம் செலுத்தி வருகிறோம். ஒன்றுபட்டு பரிவு காட்டும் சமுதாயத்தை உருவாக்க நாங்கள் முனைகிறோம்,” என்றார் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இல்லாத தலைவர் லிம் ஸ்வீ குவான், 71.

‘தக்ரல் கார்பொரேஷன் லிமிடெட்’ நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இல்லாத லிம் ஸ்வீ குவான்.
‘தக்ரல் கார்பொரேஷன் லிமிடெட்’ நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இல்லாத லிம் ஸ்வீ குவான். - படம்: அனுஷா செல்வமணி
குறிப்புச் சொற்கள்