சிறைக் கைதிகளுக்கான தேசிய இளையர் சாதனை விருது விழா, சிறைச்சாலை இணைப்பு நிலையத்தில் (தானா மேரா) உள்ள இன்ஸ்டிடியூஷன் டிஎம்1ல் வியாழக்கிழமை (நவம்பர் 27) நடைபெற்றது.
சிங்கப்பூர் சிறைத்துறை ஏற்பாட்டில் 25வது முறையாக நடைபெற்ற விருது விழாவில் 58 சிறைக் கைதிகளுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.
அவர்களில் 46 பேர் தங்க விருதும் 10 பேர் வெள்ளி விருதும் இருவர் வெண்கல விருதும் பெற்றனர்.
16 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இளம் குற்றவாளிகள் தங்களது தண்டனைக் காலத்தின்போது கற்றல், தலைமைத்துவம், சமூகச் சேவைவழி வளர்ச்சி காண ஒரு தளத்தை ஏற்படுத்தும் வகையில், சிங்கப்பூர் சிறைத்துறை 2000ஆம் ஆண்டில் சிறைக் கைதிகளுக்கான தேசிய இளையர் சாதனை விருதைத் தொடங்கியது.
இதுவரை 2,400க்கும் மேற்பட்ட இளம் சிறைக் கைதிகள் இத்திட்டத்தில் பங்கேற்றுப் பயனடைந்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் கண்டுள்ள வளர்ச்சிக்கான அங்கீகாரமாக இந்த விருது விழா அமைந்தது.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மற்றும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“கடந்த காலத்தில் எடுத்த முடிவுகள் வளர்ச்சியை நிர்ணயிப்பதில்லை. தேசிய இளையர் சாதனை திட்டம், போட்டியோ மற்றவர்களுடன் ஒப்பிடுவது பற்றியதோ அல்ல. மாறாக, கற்றலுக்கான வாய்ப்புகள் நம்மைச் சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன என்பதையே இது நினைவூட்டுகிறது.
“இந்த விருது, உங்களது துணிவையும் மற்றவர்கள் உங்கள்மீது காட்டிய நம்பிக்கையின் வெளிப்பாடு. வளர்ச்சி என்பது ஒரு தருணமன்று, நீங்கள் வாழ்நாளில் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கம்,” என்றார் திருவாட்டி கோ.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ‘இதயங்களை இணைத்து, வாழ்க்கையை மறுவுருவாக்கி, சிங்கப்பூரை ஒன்றாக வடிவமைப்போம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு விருது விழா அமைந்தது.
தேசிய இளையர் சாதனை விருது மன்றம், தொண்டூழியர்கள், சமூகப் பங்காளிகள் ஆகியவற்றின் கூட்டு முயற்சிக்கும் கடந்த 25 ஆண்டுகால பங்காளித்துவத்துக்கும் இளம் கைதிகளின் வாழ்க்கையை மாற்றியமைத்ததற்காகவும் திருவாட்டி கோ நன்றி கூறினார்.
2025 மார்ச் முதல், திட்டத்தில் பங்கேற்று வரும் இளம் கைதிகள் சேவை கற்றல், ஆரோக்கியத்துடன் வாழ்தல், வெளிப்புற நடவடிக்கைகளுக்கான மதிப்புயர்வு, சமூகத் தலைமைத்துவத் திட்டம் ஆகிய கருப்பொருள்களைச் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன்மூலம் தண்டனைக்காலம் முடிந்த பிறகு மீண்டும் சமூகத்துடன் ஒருங்கிணைய பொறுப்புணர்வு, சமூகத் திறன்கள் போன்ற பல திறன்களையும் பண்புநலன்களையும் அவர்கள் கற்றுக்கொண்டனர்.
சமூகச் சேவை அமைப்பான ஆல்கின் சிங்கப்பூர், ‘மைண்ட்ஸ்’ அமைப்பு, தொண்டு அமைப்பான ‘லயன்ஸ் பிஃபிரெண்டர்ஸ்’, ‘அர்பன் கிரீன் டாட்’ ஆகியவற்றின் ஆதரவில் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.
இடரை எதிர்நோக்கும் இளையர்கள், முன்னாள் குற்றவாளிகளின் திறமையை வளர்க்கும் நோக்கத்தில் செயல்பட்டுவரும் சமூக நிறுவனமான ‘ஆர்கிடெக்ட்ஸ் ஆஃப் லைஃப்’, கைதிகளுக்குக் கலைப் பட்டறைகளை நடத்தியது.
வரைதலையும் ஓவியக் கலைத் திறன்களையும் கற்றுக்கொண்ட அவர்கள் உருவாக்கிய கலைப் படைப்புகள், செப்டம்பரில் 111 சமர்செட் வெளிப்புறத்தில் காட்சியிடப்பட்டன.
விருது பெற்றவர்களில் ஒருவர் முதல்முறை குற்றவாளியாகத் தற்போது சிறைச்சாலைப் பள்ளியில் தமது தண்டனைக் காலத்தை நிறைவேற்றிவரும் 19 வயது நவின் (உண்மையான பெயரன்று).
தவறான பழக்கத்தின் காரணமாக வாழ்க்கையில் வழிதவறிச் சென்று, பிறகு சிறையில் கழிக்கும் காலத்தை உன்னதமாக்கும் நோக்கத்துடன் திட்டத்தில் சேர்ந்த இளையர்களில் ஒருவர்தான் நவின்.
இத்திட்டத்தின் மூலம் கைப்பந்து, கூடைப்பந்து, செப்பாக் தக்ராவ் போன்ற விளையாட்டுகளை முறைப்படி கற்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
“எனக்குத் தொடக்கத்தில் செபாக் டக்ரா விளையாடத் தெரியாது. ஆனால் பயிற்சிவிப்பாளர், நண்பர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் நான் விளையாட ஆரம்பித்தேன். நான் வெளியே வந்தவுடன், செபாக் டக்ரா போட்டிகளுக்கு விண்ணப்பித்துக் கலந்துகொள்ள விரும்புகிறேன்,” என்ற ‘நவின்’ இந்த நடவடிக்கையின் மூலம் மனந்தளர்ந்து போகக்கூடாததை கற்றுக்கொண்டதாகப் பகிர்ந்துகொண்டார்.
‘அர்பன் கிரீன் டாட்’ அமைப்புடன் சேர்ந்து ‘அர்பன் பொனிக்ஸ்’ என்ற நடவடிக்கையின் மூலம் நவீன முறைகளைப் பயன்படுத்தி சாப்பிடக்கூடிய காய்கறிகளை இளம் கைதிகள் வளர்த்தனர். பின்னர் அறுவடை செய்யப்பட்ட பயிர்கலை ஏப்பெக்ஸ் ஹர்மனி லாட்ஜில் உள்ள முதியோருக்கு அனுப்பப்படும்.
‘ஒவ்வொரு வாரம் ஒன்று அல்லது இருமுறை அந்தக் காய்கறிகளைக் கண்காணிக்க வேண்டும். இது என்னுள் பொறுப்புணர்வையும் வளர்க்கச் செய்தது,” என்ற ‘நவின்’ தாம் பயிர்கள்மீது காட்டிய அதே அக்கறையையும் பொறுப்புணர்ச்சியையும் தமது பெற்றோர்கள்மீது காட்டி அவர்களைப் பார்த்துக்கொள்ள விரும்புவதாகக் கூறினார்.
தமக்கு கிடைத்த நட்புகளும் தொடர்புகள் தமது வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்ததை நினைவுக்கூர்ந்த ‘நவின்’, தமது நண்பர்களின்றி இவ்வளவு தூரம் வந்திருக்கமுடியாததை சுட்டினார்.
“நான் சந்ததித்த மிகப்பெரிய சவால் பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் (ஜிசிஇ ‘என்’ நிலை) தேர்வுக்குத் தயாராகுவதுதான். என்னுடைய சக நண்பர்கள்தான் எனக்கு நிறைய ஊக்கம் கொடுத்தனர்,” என்ற நவின் தொடர்ந்து பட்டயக் கல்வி பயில வேண்டும் என்ற இலக்கு கொண்டுள்ளார்.

