அதிவேகத் தொழில்நுட்ப வளர்ச்சி தமது உற்பத்தித்திறனை அதிகரித்து, பணியின் தரத்தையும் நுணுக்கங்களையும் மேம்படுத்த உதவும் என்பதால், இயன்றவரை தொடர்ந்து அவற்றில் தமது திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என விரும்புகிறார் திரு பாலாஜி தாண்டவராயன், 55.
தமது துறையில் திறனை இன்னும் மேம்படுத்திக்கொள்ள ஆதரவளிக்கும் ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வல்லுநர் திட்ட’ விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
எஸ்பிஎஸ் டிரான்சிட் ஊழியரான திரு பாலாஜி, கடந்த 2008ஆம் ஆண்டு தாம் பணியில் சேர்ந்தது முதலே தொடர்ந்து தம்மை மேம்படுத்திகொள்ளும் பயிற்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார்.
பட்டயக் கல்வி பயின்று, தொழில்நுட்ப அதிகாரியாகப் பணியில் சேர்ந்த இவர் தற்போது ‘நிலை 5’ மூத்த தொழில்நுட்ப அதிகாரியாக ஒரு முழுப் பேருந்து கட்டமைக்கப்பட்டு, சாலையில் செல்லும் வரையிலான பணியினை மேற்பார்வையிடுகிறார்.
“என் வேலையின்மீது தீராக் காதல் எனக்கு. எனவே, 55 வயதானாலும் கற்பது கடினமென நினைக்கவில்லை,” எனப் புன்னகையுடன் சொன்னார் பாலாஜி.
அந்த ஆர்வத்தின் பயனாக, 2016ஆம் ஆண்டு சுவீடனில் நடைபெற்ற ‘வோல்வோ’ பேருந்துகளின் தொழில்நுட்பங்களுக்கான மூன்று வாரப் பயிலரங்கில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார். அவருக்கு ‘வோல்வோ மாஸ்டர்’ தொழில்நுட்பச் சான்றிதழும் கிடைத்தது.
அண்மையில், மின்சாரப் பேருந்துகள், கலப்பினப் (ஹைபிரிட்) பேருந்துகளின் தொழில்நுட்பங்களுக்கான பயிற்சிகளிலும் அவர் பங்கேற்றுத் தேர்ந்துள்ளார்.
பட்டயத் தொழில்நுட்ப நிபுணருமான திரு பாலாஜி, தம்முடன் பணியாற்றும் 15 இளைய ஊழியர்களுக்கு வழிகாட்டியாக, தாம் கற்றதைச் சொல்லிக் கொடுப்பதுடன், அவர்களைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவும் ஊக்குவிக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
குழுவாகப் பணியாற்றும்போது அவர்களுக்கு வாய்ப்பளித்து, முன்னேற்றத்துக்கு உதவுவதாகவும் அவர் சொன்னார்.
“என்னுடன் பணியாற்றும் துடிப்பான, இளைய ஊழியர்களை விட்டுவிட்டு நான் மட்டும் வளர்வது வளர்ச்சியன்று. அவர்களையும் உடன் அழைத்துச் செல்கிறேன். அது, அவர்களுக்கும் துறைக்கும் வளர்ச்சியாக அமைவதுடன் எனக்கும் மகிழ்ச்சி தருகிறது,” என்றார் திரு பாலாஜி.
தமது துறையில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் அதிகமென்று குறிப்பிட்ட இவர், “செயற்கை நுண்ணறிவு, மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் என்னை மேம்படுத்திக்கொள்ள அது ஆதரவளிக்கும்,” எனக் குறிப்பிட்டார்.
தமது பணியில், பல்வேறு பணிக்குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவதும் பல ஊழியர்களை ஒன்றிணைப்பதும் அடங்கும் என்பதால் தலைமைத்துவப் பயிற்சி மேற்கொள்ளவும் இவர் ஆர்வத்துடன் உள்ளார்.
“என் ஆர்வம் கண்டுகொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதில் மகிழ்ச்சி,” என்றார் திரு பாலாஜி.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வல்லுநர் திட்ட, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் முதலாளிகள் விருதுகள்
தமது துறைகளில் திறனும் வாழ்நாள் கற்றலில் ஆர்வமும், பிறரை வழிநடத்தி முன்னேற்றும் அர்ப்பணிப்பும் கொண்ட 16 சிங்கப்பூரர்களை அங்கீகரித்த ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வல்லுநர் திட்ட விருது’ வழங்கும் விழா வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 7) கரையோரப் பூந்தோட்டங்களின் மலர் வளாக அரங்கில் (Flower Field Hall) நடைபெற்றது. விருதாளர்களுக்கு, திறன் மேம்பாடு, கற்றல் ஆகியவற்றுக்காக 10 ஆயிரம் வெள்ளியும் வழங்கப்பட்டது.
பணியிடக் கற்றலிலும், ஊழியர்களின் திறன் மேம்பாட்டிலும் அதிக முதலீடு செய்யும் 26 நிறுவனங்களுக்கு ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் முதலாளி’ விருது வழங்கப்பட்டது. ஒன்பது நிறுவனங்கள் தங்க விருதும் 15 நிறுவனங்கள் வெள்ளி விருதும் பெற்றன.
இவ்விருதுகளின் புரவலரான அதிபர் தர்மன் சண்முகரத்னம் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விருதுகளை வழங்கினார்.
இதில், கல்வி அமைச்சரும், சமூகச் சேவைகளின் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டெஸ்மண்ட் லீ, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல், கல்வி மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி ஆகியோரும் பங்கேற்றனர்.
“செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அதிவேகத் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கிடையே அடுத்த 10 ஆண்டுகளில் வேலை முறைகள் எவ்வாறு மாறும் என்பதைக் கணிப்பது கடினம். எனவே, சுறுசுறுப்பாகவும் மீள்தன்மையுடனும் செயல்படுவது அவசியம். தொடர்ந்து கற்பதும் சூழ்நிலைகளுக்கேற்ப தகவமைத்துக்கொள்வதுமே நிச்சயமற்ற சூழலுக்குச் சிங்கப்பூரின் பதிலாக இருக்கும்,” என்றார் அமைச்சர் டெஸ்மண்ட் லீ.
அதற்கு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் இயக்கத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்
“வேலை, குடும்பம் உள்ளிட்ட பிற கடமைகளுடன் கற்றலையும் ஊழியர்கள் சமாளிக்க வேண்டும். மேம்பட்ட உற்பத்தித்திறன், திறமையான ஊழியர்கள் போன்ற நீண்டகால நலன்களைக் கருத்தில்கொண்டு, ஊழியர்களின் பயிற்சி நேரம், செலவுகள் ஆகிய சிரமங்களை நிறுவனங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்,” என்றும் திரு டெஸ்மண்ட் லீ அறிவுறுத்தினார்.
புதிய வாழ்நாள் கற்றல் விருது
ஐந்து பலதுறைக் கல்லூரிகளும் தொழில்நுட்பக் கல்விக் கழகமும் இணைந்து ‘ஸ்கில்ஸ்பியூச்சர் வாழ்நாள் கற்றல் விருதை’ வரும் 2026ஆம் ஆண்டு அறிமுகம் செய்யவுள்ளன.
இது, ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலிருந்தும் மூன்று முன்மாதிரிப் பட்டதாரிகளை அங்கீகரிக்கும். இவ்விருதுகள் அந்தந்தக் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாவின்போது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ இயக்கத்தின் பத்தாம் ஆண்டு
விருது வழங்கும் விழா, ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ இயக்கத்தின் பத்தாம் ஆண்டுக் கொண்டாட்டங்களின் நிறைவாகவும் அமைந்தது.
அதனைக் குறிக்கும் வகையில், ஊழியர்களின் மேம்பாட்டில் அர்ப்பணிப்பையும், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் இயக்கத்தைச் சமூகத்திலும் தொழில்துறைக்குள்ளும் கொண்டு செல்வதற்கு ஆற்றிய பங்கையும் அங்கீகரிக்கும் நோக்கில், டிபிஎஸ் வங்கி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்குச் சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.

