மரபுடைமை வர்த்தகங்கள் நாட்டின் அடையாளம் என்றும் நாட்டைக் கட்டமைப்பதில் அவை முக்கியப் பங்காற்றுகின்றன என்றும் தற்காலிக கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் டேவிட் நியோ தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதுமிருந்தும் வரும் வருகையாளர்கள் சிங்கப்பூரின் தனித்துவமான கலாசாரத்தை அனுபவிக்க மரபுடைமை வர்த்தகங்கள் வழியமைப்பதாகத் திரு நியோ கூறினார்.
வியாழக்கிழமை (அக்டோபர் 9) நடைபெற்ற சிங்கப்பூர் மரபுடைமை வர்த்தகத் திட்டத்தின் அங்கீகரிப்பு விழாவில் திரு நியோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் .
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிமும் விழாவிற்கு வந்திருந்தார்.
“மரபுடைமை வர்த்தகங்கள் நம் மரபைப் பாதுகாப்பதில் மிகுந்த கடப்பாடு கொண்டுள்ளன. அவை நமது சமூகங்களுக்குப் பெரிய அளவில் பங்களிக்கின்றன,” என்று திரு நியோ தெரிவித்தார்.
கல்விக்கான மூத்த துணை அமைச்சருமான திரு நியோ, சிங்கப்பூர் மரபுடைமை வர்த்தகத் திட்ட அங்கீகாரம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தகங்களின் சிறப்பையும் தேவையையும் உணர்ந்து அவற்றுக்குத் துணை நிற்க கடப்பாடு கொண்டுள்ளதாகவும் சொன்னார்.
மரபுடைமை வர்த்தகங்கள் அமைப்புகளுக்கான உருமாற்ற மானியம் மூலம் எஸ்ஜி கலாசார சிறப்புத்தொகையில் இணைந்துகொள்ளும் வகையில் சிங்கப்பூரர்களுக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், அந்த மரபுடைமை வர்த்தகங்கள் சிங்கப்பூர் இரவு விழா, சிங்கப்பூர் மரபுடைமை விழா போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரர்களும் மரபுடைமை வர்த்தகங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்ற திரு நியோ, எஸ்ஜி கலாசார சிறப்புத்தொகையைப் பயன்படுத்தி மரபுடைமை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமாறும் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
விழாவில் 42 மரபுடைமை வர்த்தகங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இவ்வாண்டு மார்ச் மாதத்தில் முன்னோடித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சிங்கப்பூரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள குறைந்தது 30 ஆண்டுகளாகச் செயல்பட்டு நகரத்தின் உயிரோட்டத்தை வளப்படுத்துவதிலும் சிங்கப்பூரின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் தீவிரப் பங்காற்றிய உள்நாட்டில் உரிமம் பெற்ற வர்த்தகங்களுக்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது.
வர்த்தகங்களின் பாரம்பரிய முக்கியத்துவம், சமூகப் பங்களிப்பு, புதுமையான முயற்சிகள், வணிகத்தின் நிலைத்தன்மைக்கான முயற்சிகள் ஆகியவை அவற்றின் வெற்றிகரமான பரிந்துரைகளுக்கு முக்கியக் காரணங்களாகும்.
அடையாளம் காணும் எளிமைக்காக கடைகளின் முகப்பில் ‘எஸ்ஜி மரபுடைமை வர்த்தகச் சின்னம்’, தேசிய மரபுடைமைக் கழகத்தின் மரபுடைமை இணையத்தளத்தில் தகவல் பதிவேட்டில் இணைத்தல், இடங்களை மேம்படுத்தும் முயற்சிகளில் இடம்பெறுதல், வணிக ஆலோசனைகள் போன்ற ஆதரவுகளை இத்திட்டம் அவர்களுக்கு வழங்குகிறது.
அங்கீகாரம் பெற்றவர்கள் சமூகத்தின் ஒருமைப்பாட்டுச் சக்தியாக செயல்பட்டு தங்களுக்குரிய வழிகளில் சமூகத்துடன் இணைந்து பங்களித்துள்ளனர்.
அங்கீகாரம் பெற்ற வர்த்தகங்களின் பட்டியலில் அனுஷியா பூக்கடை, தாக்ஷாய்னி சில்க்ஸ் சேலைக் கடை, காந்தி உணவகம், காயத்ரி உணவகம், கமலா உணவகம், கோமள விலாஸ் உணவகம், முத்துஸ் கறி உணவகம், சிஸ் பிரீமியம் மீட் இறைச்சி கடை, ஸ்டைல்மார்ட், தண்டபாணி கம்பெனி பிரைவேட் லிமிடெட், விஎஸ்எஸ் வருசை முகம்மது அண்ட் சன்ஸ் ஆகிய இந்திய வர்த்தகங்கள் இடம்பெற்றுள்ளன.