தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவான பணிச்சூழலை ஏற்படுத்தித் தந்தோருக்கு விருது

3 mins read
9e815a97-c0eb-49b6-858b-6c0fac22714c
சேஞ்ச்மேக்கர் விருதை ‘எனேபிலிங் படி’ பிரிவில் பெற்றார் திருவாட்டி பூஜா வி‌ஷ்வநாத், 44. விருதை வழங்கும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டும் ‘எஸ்ஜி எனேபலின்’ தலைமை நிர்வாக அதிகாரி கு ஜியோக் பூனும். - படம்: எஸ்ஜீ எனேபல்
multi-img1 of 2

மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கி வேலைவாய்ப்புகளை வழங்கியதற்காகவும் அவர்களுக்கு ஏதுவான பணிச்சூழலை அமைத்துத் தந்ததற்காகவும் இவ்வாண்டு ஆக அதிகமாக 110 நிறுவனங்களும் தனிநபர்களும் எஸ்ஜி எனேபல் (SG Enable) அமைப்பின் மூன்றாவது ‘எனேபலிங் மார்க்‌’ (Enabling Mark) விருது விழாவில் சிறப்பிக்கப்பட்டனர்.

மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய வேலைவாய்ப்பு வழங்கியதற்காக 98 நிறுவனங்கள், தேசிய அளவிலான ‘எனேபலிங் மார்க்‌’ அங்கீகாரக் கட்டமைப்பைப் பெற்றன. பன்னிரண்டு பேருக்கு ‘சேஞ்ச்மேக்கர்’ விருதுகள் (Changemaker Awards) வழங்கப்பட்டன.

ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் இவ்விருது நிகழ்ச்சி, இம்முறை பீச் ரோட்டில் உள்ள பார்க் ராயலில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) நடைபெற்றது. இவ்விழாவில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

சிங்கப்பூரை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல பலவித திறன் கொண்டவர்களை உள்ளடக்கிய சமூகமே இன்றியமையாத திறவுகோல் என்று திரு ஹெங் தமது உரையில் கூறினார்.

உடற்குறையை ஒரு பலவீனமாக கருதுவதற்குப் பதிலாக, அவர்கள் தங்களிடம் உள்ள பலத்தைக்‌ கண்டறிந்து தங்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் ஆக்ககரமான விளைவை ஏற்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்றும் திரு ஹெங் சொன்னார்.

‘ஓப்பன் டோர்’ (Open Door Programme) திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்தும் முதலாளிகளுக்கு $40,000 வரையிலான புதிய முதலாளி மேம்பாட்டு மானியத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் திரு ஹெங் தெரிவித்தார்.

கலாசார, சமூக, இளையர்துறை மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, மத்திய சிங்கப்பூர் வட்டார மேயர் டெனிஸ் புவா இருவரும் விழாவில் கலந்துகொண்டனர்.

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் மூத்த பொறுப்பில் உள்ள திருவாட்டி பூஜா வி‌ஷ்வநாத், 44, செவிப்புலன் குறைபாடு உடைய சக ஊழியரான திரு ஏட்ரியன் யாப்பிற்குப் பணியிடத்தில் வழங்கிய தொடர் ஆதரவுக்காக, ‘எனேபிலிங் படி’ (Enabling Buddy) பிரிவில் சேஞ்ச்மேக்கர் விருது பெற்றார்.

திருவாட்டி பூஜா, அனைவரையும் உள்ளடக்கிய பணிச்சூழலை ஏற்படுத்தித் தந்ததற்கு தமது வளர்ப்பே முக்கியக் காரணம் என்றார். கல்வியாளர்களான தம் பெற்றோர், பின்தங்கிய சமூகங்களுக்கு ஆற்றியப் பங்கை அவர் நினைவுகூர்ந்தார்.

“ஏட்ரியனுடன் நெருக்கமாகப் பணிபுரிந்தபோது, அவர் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களை என்னால் உணர முடிந்தது,” என்றார் திருவாட்டி பூஜா.

திரு ஏட்ரியனுக்கு ஆதரவளிக்க, செவிப்புலன் குறைபாடு உடையோர் பயன்படுத்தும் மொழி, தொழில்நுட்பத்தைப் பற்றி கற்றதுடன், மாற்றுத்திறனாளிகளின் சவால்களைப் பற்றி மற்ற ஊழியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, தகுந்த ஆதரவளிக்க சைகை மொழிப் பட்டறைகளை திருவாட்டி பூஜா நடத்தினார்.

“இந்த விருது நாங்கள் செய்துவரும் பணியை அங்கீகரிப்பதுடன், மேலும் சிறப்பாகச் செயல்பட ஊக்குவிக்கிறது. அனைவரும் ஒன்றுகூடினால் வேலையிடத்தில் ஆக்ககரமான மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதை இது காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.

தங்கப் பிரிவில் ‘எனேபலிங் மார்க்‌’ விருது பெற்ற நிறுவனங்களில் ஒன்றான ‘டிரம் புரோடஜி சிங்கப்பூர்’ (Drum Prodigy Singapore), அனைத்து மக்களுக்கும் இசைக் கல்வி, சுகாதாரம் தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்கும் சமூக நிறுவனமாகும். அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்துவதில் அது தீவிரம் காட்டி வருகிறது.

அதன் நிறுவனர்களான சிவரஞ்சினி மூர்த்தி, 42, ஷாம்ரோஸ் கான், 43, இருவரும் 2017 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி ஆதரவளித்து வருவதற்கான அங்கீகாரமாக இவ்விருதைக் கருதுகின்றனர்

“இது, நாங்கள் கடந்து வந்த பாதையை எண்ணிப் பார்க்கவும் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதற்கும் உந்துதல் தருகிறது. அனைவரையும் உள்ளடக்கிய வேலையிடம் எங்கள் நிறுவனத்திற்கு மட்டுமின்றி, நம்மை சார்ந்து பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இவ்விருது நினைவூட்டுகிறது,” என்றார் திரு ஷாம்ரோஸ்.

“அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் எங்கள் பாதையைப் பின்பற்ற மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பதும் எங்கள் விருப்பம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்