கடந்த ஜூலை மாதம் தஞ்சோங் காத்தோங் ரோடு சவுத்தில் ஏற்பட்ட திடீர்ப் புதைகுழியில் விழுந்த பெண்ணை மீட்ட வெளிநாட்டு ஊழியர்களை அதிபர் தர்மன் சண்முகரத்னமும் அவரது துணைவியார் ஜேன் இத்தோகியும் சந்தித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) இஸ்தானா பொது வரவேற்பு நாளன்று அதிபர் தர்மனும் திருவாட்டி ஜேனும் அந்த வெளிநாட்டு ஊழியர்களைச் சந்தித்துப் பேசி, அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
“நாங்கள் செய்த இந்த ஒரு நற்செயலால் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது,” என்றார் கட்டுமானத்தள மேற்பார்வையாளர் பிச்சை உடையப்பன் சுப்பையா.
அவருடன் சாத்தபிள்ளை ராஜேந்திரன், 56, அன்பழகன் வேல்முருகன், 26, பூமலை சரவணன், 28, கணேசன் வீரசேகர், 32, போஸ் அஜித் குமார், 26, ஆறுமுகம் சந்திரசேகரன், 47, ஆகிய சக ஊழியர்களும் அதிபர் மாளிகைக்குச் சென்றிருந்தனர்
தனக்குக் கிடைத்த இந்தப் பாராட்டு சிங்கப்பூரில் தன்னைப் போன்ற வெளிநாட்டு ஊழியர்களையும் சேரும் என்றார் திரு சுப்பையா.
“வெளிநாட்டு ஊழியர்கள் முன்வந்து தேவைப்படுவோருக்கு தக்க நேரத்தில் கைகொடுக்க வேண்டும். கிடைத்த இந்த அங்கீகாரம் போதுமானதைவிட அதிகம்,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
விரைவாகவும் துணிச்சலுடனும் ஒரு நைலான் கயிற்றைப் பயன்படுத்தி புதைகுழியில் விழுந்த பெண்ணை மீட்ட அனுபவத்தை மீண்டும் செய்தியாளர்களிடம் திரு சுப்பையா பகிர்ந்துகொண்டார்.
“கட்டுமானத் தளங்களில் நாங்கள் அடிக்கடி நைலான் கயிற்றைப் பயன்படுத்துவதுண்டு. அது அன்று எங்களுக்கு மிகவும் உதவியாக அமைந்தது,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
அதிபர் மாளிகையை வெளிப்புறத்திலிருந்து மட்டும் இதுவரை கண்ட திரு சாத்தபிள்ளை ராஜேந்திரன், முதன்முதலாக அதிபரை நேரில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாகக் கூறினார்.
“அவரைச் சந்திக்க அழைப்பு வந்தது என் அதிர்ஷ்டம் என்று நான் கருதுகிறேன். அதிபரின் பாராட்டு எல்லா மக்களையும் சேர வேண்டும்,” என்றார் அவர்.
“என் குடும்பத்தார், நண்பர்கள் அனைவரும் இது குறித்து மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளனர்,” என்றும் திரு ராஜேந்திரன் சொன்னார்.
ரிவர் வேலி கடை வீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் பிள்ளைகளைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்களும் அதிபரைச் சந்தித்தனர்.
அவர்களுக்கும் அதிபர் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.
பொது வரவேற்பு நாளன்று 22,000 பேர் இஸ்தானாவிற்கு வருகை புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
நெருங்கிவரும் சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு அமர்ந்தபடி விளையாடும் வாலிபால், மெய்நிகர் அம்பெய்தல் போன்ற கேளிக்கை நடவடிக்கைகள், நேரடி இசை நிகழ்ச்சிகள், கைவினை நடவடிக்கைகள் ஆகியவை மக்களைக் குதூகலத்தில் ஆழ்த்தின.
பகலில் சிறிது நேரம் இடியுடன் கூடிய மழை பெய்தபோதும் அதைப் பொருட்படுத்தாமல் மக்கள் உற்சாகமாக அதிபரையும் அவரின் துணைவியாரையும் சந்தித்ததுடன், பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.