அடுத்தவரின் துயர் தணிக்க சமூகத் தோட்டம் அமைத்தவருக்கு அங்கீகாரம்

அடுத்தவரின் துயர் தணிக்க சமூகத் தோட்டம் அமைத்தவருக்கு அங்கீகாரம்

2 mins read
சமூகத் தோட்டத்தின்மூலம் மற்றவர்களுக்கு ஆறுதல் அளித்தவருக்கு கிடைத்த அங்கீகாரம்
cdb105d5-fd4a-48b5-8376-c321b225b102
கணேஷ் குமார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கொவிட்-19 பெருந்தொற்று உலகத்தைப் புரட்டிப்போட்ட நேரத்தில் தாயை இழந்த துயரத்திலிருந்து மீண்டுவருவதற்காக வீட்டருகில் இருக்கும் தோட்டத்தில் இளஞ்சிவப்புச் செம்பருத்திச் செடியை நட்டார் திரு கணேஷ் குமார், 42.

தோட்டக்கலை என்பது அவர் தம் பெற்றோர், தாத்தா, பாட்டியுடன் இணைந்து வழக்கமாகச் செய்துவந்த குடும்ப நடவடிக்கை.

பொறுப்புணர்வோடு இருப்பதன் அவசியத்தையும் மற்றவற்றின்மீது அக்கறை காட்டும் பண்பையும் திரு கணே‌ஷுக்குள் விதைக்க அவர்கள் இதனைப் பயன்படுத்தினர்.

துயரைத் தணிப்பதற்காகத் தொடங்கப்பட்டு உட்லண்ட்சில் செழிப்பான தோட்டமாக உருவெடுத்து இன்று இங்குள்ள மிகப்பெரிய சமூகத் தோட்டங்களில் ஒன்றாகத் திகழ்கிறது அத்தோட்டம்.

மனவுளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்த திரு கணேஷ், தாம் அரும்பாடுபட்டு உருவாக்கிய தோட்டம், மற்றவர்களுக்கும் ஆறுதலாக இருப்பதோடு மகிழ்ச்சியளிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்.

2025ஆம் ஆண்டின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (எஸ்டி) சிங்கப்பூரருக்கான விருதுக்கு முன்மொழியப்பட்டோரின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் திரு கணேஷ்.

அவர் இந்த ஆண்டு அறியப்படாத நாயகர் விருதுக்கு முன்மொழியப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எஸ்டி வழங்கும் இவ்விருது, சமூகத்திற்குப் பெரும்பங்காற்றியுள்ளோரைச் சிறப்பித்து வருகிறது.

வியாழக்கிழமை (மார்ச் 19) தெமாசெக் ஷாப்ஹவுஸ் வளாகத்தில் இடம்பெற்ற விருது நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இறுதிச் சுற்றுக்குத் திரு கணேஷ் உட்பட மொத்தம் எட்டுப் பேர் தகுதி பெற்றனர்.

“இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றவர்கள் சிங்கப்பூரின் மிகச் சிறந்தவர்களைப் பிரதிநிதிக்கிறார்கள். அவர்கள் பலதரப்பட்ட பின்னணிகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் ஆழமான நோக்கத்தால் ஒன்றுபட்டுள்ளனர். சிக்கலான, சவால்கள் நிறைந்த இந்த உலகத்தில் கருணை, மாண்பு, உறுதியான செயல்பாடு ஆகியவை நமது மிகச் சக்திவாய்ந்த ஆயுதங்களாக விளங்குகின்றன என்பதை அவர்கள் உணர்த்தியுள்ளனர்,” என்று சொன்னார் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் ஆசிரியர் ஜேமி ஹோ.

அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைக்க குரல்கொடுக்கும் லாப நோக்கமற்ற அமைப்பான ‘ஹேப்பி ஹார்ட்ஸ் மூவ்மென்ட்’ அமைப்பின் நிறுவனரான 45 வயது டாக்டர் சென் ஷிலிங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இதழின் சென்ற ஆண்டின் சிறந்த சிங்கப்பூரருக்கான விருதைத் தட்டிச் சென்றார்.

டாக்டர் சென் ஷிலிங்.
டாக்டர் சென் ஷிலிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இத்துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பணிக்காக டாக்டர் சென்னுக்கு வெற்றிக் கிண்ணம், $20,000 ரொக்கப் பரிசு, மில்லினியம் ஹோட்டல்ஸ் மற்றும் ரிசார்ட்ஸின் உலகளாவிய கிளைகள் எதிலாவது ஐந்து இரவுகள் தங்குவதற்கான வசதி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பிஸினஸ் வகுப்பில் இரண்டு விமானச் சீட்டுகள் ஆகியவை வழங்கப்பட்டன.

இவ்வாண்டு முதன்முறையாக எஸ்டி சிறந்த இளம் சிங்கப்பூரர் பிரிவிலும் எஸ்டி ஆண்டின் சிறந்த சிங்கப்பூரர் விருது (அனைத்துலகத் தாக்கம்) பிரிவிலும் இருவருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தற்போது 11வது ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ள விருது, சிங்கப்பூரின் புகழை உலக அளவில் கொண்டுசென்றவர்களையும் மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகத் தங்கள் கடமைக்கு அப்பால் தன்னலமின்றி உழைத்தவர்களையும் கௌரவிக்கிறது.

இதர இறுதிப் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் சான்றிதழ், $5,000 ரொக்கப் பரிசு, மில்லேனியம் ஹோட்டல்ஸ் மற்றும் ரிசார்ட்ஸின் உலகளாவிய கிளைகள் எதிலாவது மூன்று இரவுகள் தங்குவதற்கான வசதி, இரண்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எக்கானமி வகுப்பு விமான சீட்டுகள் ஆகியவை வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்