சுற்றுச்சூழல், தோட்டக்கலை, விலங்குநல மருத்துவம், விலங்கியல் போன்ற துறைகளில் திறம்பட செயல்பட விரும்பும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது தேசியப் பூங்காக் கழகத்தின் பீட்டர் லிம் உபகாரச் சம்பளம்.
இந்த உபகாரச் சம்பளத்தின்கீழ் முதன்முறையாக திறன் அடிப்படையிலான புதிய உபகாரச் சம்பள விருது 27 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
அந்த மாணவர்கள் உள்ளூர்ப் பல்கலைக்கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள், நன்யாங் நுண்கலைக் கழகம் ஆகிய கல்வி நிலையங்களைச் சேர்ந்தவர்கள்.
கல்வியில் தொடர்ந்து சிறந்து விளங்குவதோடு, தங்கள் துறைகளில் எதிர்காலத் தலைவர்களாக உருவெடுக்கும் ஆற்றலை வெளிப்படுத்திய மாணவர்களை அங்கீகரித்து ஊக்குவிக்கும் நோக்கில், இவ்வாண்டு இந்தப் புதிய உபகாரச் சம்பள விருதுப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கல்விக் கழக கிழக்கு வளாகத்தில் புதன்கிழமை (ஜனவரி 21) உபகாரச் சம்பள விருது விழா இடம்பெற்றது. அதில் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இத்துறையில் முதலீடு செய்வதன் மூலம், சிங்கப்பூர் வாழ்வதற்கு மிகவும் உகந்ததாகவும், யாவரும் விரும்பும் இடமாகவும் மாறியுள்ளதாக அவர் சொன்னார்.
“திறமையாளர்களையும் முதலீட்டாளர்களையும் நம்மை நோக்கி ஈர்க்கவும் இது உதவியுள்ளது. சிங்கப்பூரர்களுக்கு மேலும் பல நல்ல வேலைவாய்ப்புகளையும், சிறந்த ஊதியத்தையும் வழங்க நீடித்த பொருளியல் வளர்ச்சி அவசியம் என்பதால் இது மிக முக்கியமானது,” என்று திரு சீ வலியுறுத்தினார்.
மின்னிலக்கமயமாக்கலும் தானியக்கத் தொழில்நுட்பங்களும் பசுமை, நிலவனப்புத் துறைகளை மாற்றி அமைத்து வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் சீ, அவை நீடித்த நிலைத்தன்மையுடைய நிலவனப்புத்துறை, பல்லுயிர்ச்சூழல், சூழலியல் நலம், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றை சிறப்பாக ஆதரிக்கும் புதிய பணிமுறைகளைச் சாத்தியமாக்குவதாக விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் இயற்கை எழில்மிகு நகரமாக உருமாறி வரும் இவ்வேளையில், செல்லப்பிராணிகளையும் வனவிலங்குகளையும் பராமரிப்பதற்குத் திறமையான விலங்கியல் நிபுணர்களுக்கும் கால்நடை மருத்துவர்களுக்குமான தேவை அதிகரித்து வருவதாகவும் திரு சீ குறிப்பிட்டார்.
இத்தேவையை அறிந்து தேசியப் பூங்காக் கழகம் இளையர்களிடையே சுற்றுச்சூழல் குறித்த அதிகப் பொறுப்புணர்வை ஊக்குவித்து வருவதாகவும் அவர் சொன்னார்.
விருது விழாவில் 192 மாணவர்களுக்கு கல்வி விருதுகளும் வழங்கப்பட்டன. 2020ல் தொடங்கப்பட்ட தேசியப் பூங்காக் கழகத்தின் பீட்டர் லிம் உபகாரச் சம்பளம் இதுவரை வெவ்வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1,200 மாணவர்களுக்கு பயனளித்துள்ளது.
அந்த உபகாரச் சம்பளம் பெற்ற 27 மாணவர்களில் ஒருவர் 22 வயதாகும் மிகேலா இஷானி நாநாயாகாரா.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு விலங்குநல மருத்துவத் தொழில்நுட்பத்தில் பட்டயப் படிப்பு பயிலும் அவர், இந்த உபகாரச் சம்பளம் தமது குடும்பத்தின் நிதிச் சுமையை தீர்க்க உதவும் என்றார்.

