நிலையற்ற உலகப் பொருளியல் சூழலில் சிங்கப்பூரின் சில்லறை விற்பனை தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டுவரும் நிலையில், அத்துறைக்கு உதவி தேவைப்படுவதாகச் சிங்கப்பூர் சில்லறை வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
வாடகை, செயலாக்கச் செலவுகளுடன் மின்வணிகத்தால் கடும்போட்டி, மின்னிலக்க வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஈடுகொடுக்க வேண்டிய சூழல் எனப் பல்வேறு காரணங்களால் சில்லறை விற்பனை வணிகங்களுக்குச் சவால்கள் அதிகரித்துள்ளன.
இடைக்கால, நீண்டகாலத் தீர்வுகள் தேவை என்பது உணவகங்கள், துணிக்கடைகள், அறைகலன் கடைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கடைகளின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.
உடைகளையும் காலணிகளையும் விற்கும் கடைகளின் விற்பனை தொடர்ந்து குறைந்து வந்தாலும் பேரங்காடிகள் போன்றவை சவால்மிக்க சூழலிலும் மீள்திறனுடன் செயல்படுகின்றன.
‘ஃபார்முலா 1’ கார்ப் பந்தயம், அனைத்துலக இசை நிகழ்ச்சிகள் எனச் சுற்றுப்பயணத் துறையை ஊக்குவிக்கும் திட்டங்கள் பல இருந்துவரும்போதும் சிங்கப்பூரின் வலுவான நாணய மதிப்பு, வெளிநாட்டினரின் பொருள் வாங்கும் செலவினத்தைக் குறைக்கிறது.
மின்னிலக்க உருமாற்றத்திற்கு ஏற்ப தொழில்துறை தன்னைத் தகவமைத்துக் கொண்டபோதும் சிங்கப்பூர் சில்லறை வணிகர் சங்கம், இங்குள்ள விற்பனையாளர்களின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் ஆதரவு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கிறது.
திறன்களை வளர்க்கும் திட்டம், முகவை மற்றும் சான்றளிப்பு முறையில் முன்னேற்றம், சிடிசி (CDC) பற்றுச்சீட்டுகளின் பயன்பாட்டைப் பொருள்வாரியாக மேம்படுத்துவது ஆகியவற்றின்வழி சிறிய, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்த இயலும் என்று அச்சங்கம், ஜனவரி 15ல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
“வாடிக்கையாளர்களுடன் அடிக்கடி உறவாட வேண்டியுள்ள வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் அமர்த்துவதற்கான செலவு குறைக்கப்பட வேண்டும். அத்துடன், 50 வயதுக்கும் மேற்பட்ட நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் ஆகியோரைப் புதிய வேலைகளில் அமர்த்துவதற்கான ஊக்குவிப்புகள் தரப்பட வேண்டும்,” என்றும் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
செயற்கை நுண்ணறிவைத் தழுவுவதிலும் அதற்கான திறன் மேம்பாடுகளை ஊழியர்கள் மேற்கொள்வதிலும் எதிர்காலம் அடங்கியிருக்கிறது என்றும் சங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

