தீபாவளியையொட்டி ஆபத்தான முறையில் சாலையில் பட்டாசு வெடித்த 43 வயது ஆடவருக்கு இன்று (டிசம்பர் 31) நீதிமன்றத்தில் $3,000 அபராதம் விதிக்கப்பட்டது.
சிவசரவணன் சுப்பையா முருகன் என்னும் அந்த சிங்கப்பூரர் லிட்டில் இந்தியா வட்டாரம் பேராக் ரோட்டில் உள்ள இரவு விடுதியில் பணிபுரிந்தார்.
தீபாவளியைக் கொண்டாட ‘ஹேப்பி பூம்’ பட்டாசு பெட்டி ஒன்றை அவர் வாங்கியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் எமிலி கோ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தீபாவளிக்கு முந்திய நாளான அக்டோபர் 26ஆம் தேதி இரவு 8.30 மணி முதல் மறுநாள் விடியற்காலை 4 மணி வரை அந்தப் பகுதியில் உள்ள பல மதுபானக் கூடங்களுக்கு நண்பர்களுடன் சென்று அவர் மருந்து அருந்தினார்.
பின்னர் பெட்டி நிறைய இருந்த பட்டாசுகளை மெட்ராஸ் ஸ்திரீட், கேம்பல் லேன் சாலை சந்திப்பில் வைத்து தீப்பற்ற வைத்துவிட்டு அவர் ஓடிவிட்டார்.
தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு இருந்த போலிசார் பட்டாசு சத்தத்தையும் பட்டாசில் இருந்து கிளம்பிய ஒளி வானில் பறந்து சென்றதையும் கண்டனர்.
உடனடியாக அவர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்றபோது பட்டாசுப் பெட்டி அங்கு காணப்பட்டது. ஆனால் சிவசரவணன் அங்கு இல்லை.
ஃபேரர் பார்க் ஸ்டேஷன் ரோட்டில் இருந்த ஒரு போலிஸ் அதிகாரி பின்னிரவு 12.39 மணிக்கு வானில் பட்டாசு ஒளியைக் கண்டதாகக் கூறினார்.
இருந்தபோதிலும் இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை; சொத்துகளுக்கும் சேதமில்லை.
தமக்கு விதிக்கப்பட்ட அபராத்தை இரு தவணைகளாகச் செலுத்த சிவசரவணன் விடுத்த வேண்டுகோளை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அவர் எப்போது கைது செய்யப்பட்டார் என்பது தெரிவிக்கப்படவில்லை.
ஆபத்தான முறையில் பட்டாசு வெடிப்போருக்கு முதல் தடவை ஈராண்டு வரையிலான சிறைத் தண்டனையும் $2,000க்கும் $10,000க்கும் இடையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரில் பாதுகாப்புக் காரணங்களுக்காக 1972ஆம் ஆண்டு பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் சில குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி அவற்றைப் பயன்படுத்தலாம்.
சட்டத்தை அப்பட்டமாக மீறிய குற்றத்திற்காக சிவசரவணனுக்குக் குறைந்தபட்சம் $3,000 அபராதம் விதிக்க அரசுத்தரப்பு விடுத்த கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity