போரைத் தவிர்க்க நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்து ஈரான்மீது தாக்குதல் தொடங்கியுள்ளது குறித்து சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு சனிக்கிழமை (பிப்ரவரி 28) வருத்தம் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட அனைவரும் மீண்டும் சமரசப் பேச்சுகளைத் தொடங்கி அனைத்துலகச் சட்டம், ஐக்கிய நாட்டு சாசனம் ஆகியவற்றின் கொள்கைகளின்படி அமைதிக்கான தீர்வை எட்டும்படி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
சனிக்கிழமை தொடங்கி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் பல பகுதிகளில் தாக்குதல் மேற்கொண்டுள்ளன. மத்தியக் கிழக்கு அதனால் பெரும் பதற்றமடைந்துள்ளது.
ஈரான் பதில் நடவடிக்கையாக அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள மத்தியக் கிழக்கு நாடுகள்மீது ஏவுகணைகளைப் பாய்ச்சியுள்ளது.
இஸ்ரேல், ஈரான் உள்பட மத்தியக் கிழக்கில் இதுவரை எந்த சிங்கப்பூரரும் பாதிக்கப்பட்டதாக அறிவிப்புகள் இல்லை. பாதுகாப்பற்ற நிலவரத்தைக் கருத்தில்கொண்டு, விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆகவே சிங்கப்பூரர்கள் அந்த வட்டாரத்துக்குச் செல்வதை தவிர்க்கும்படி சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது மத்தியக் கிழக்கில் வாழும் அல்லது அங்கிருந்து மாற்றுப் பயணங்களை மேற்கொள்ளும் சிங்கப்பூரர்கள் சொந்தப் பாதுகாப்புக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துகொள்ளும்படி அமைச்சால் வலியுறுத்தப்படுகிறார்கள்.
அவர்கள் இருக்கும் இடங்களை விட்டு அவசரத் தேவையின்றி வெளியேறுவதைத் தவிர்த்து, செய்திகளைக் கண்காணித்து, தேவைப்படும்போது பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து, உள்ளூர் அரசாங்கங்களின் அறிவுரைப்படி நடந்துகொள்ளவேண்டும்.

