சிங்கப்பூரின் வரலாற்று மரபைப் பேணிக்காக்கும் நோக்கில், தேசிய மரபுடைமைக் கழகம், 121 கொடையாளர்களுக்கு ‘மரபுடைமைப் புரவலர் விருது’ வழங்கிச் சிறப்பித்துள்ளது. அவர்கள், ஏறத்தாழ $17 மில்லியன் மதிப்பிலான ஆதரவை வழங்கியுள்ளனர்.
பீச் ரோட்டில் உள்ள பார்க்ராயல் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) நடைபெற்ற 2025ன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் டேவிட் நியோ அதனைத் தெரிவித்தார்.
தேசிய மரபுடைமைக் கழகம் 2006ஆம் ஆண்டு விருதுகளை வழங்கத் தொடங்கியதிலிருந்து, கடந்த இருபது ஆண்டுகளில் ஆக அதிகமான புரவலர்கள் ஒரே ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.
சிறப்பிக்கப்பட்ட 121 புரவலர்களில் 72 அமைப்புகளும் நிறுவனங்களும் 49 தனிநபர்களும் அடங்குவர். அவர்களின் ஒட்டுமொத்தப் பங்களிப்பாக $5.39 மில்லியன் ரொக்கமும் $11.61 மில்லியன் மதிப்புள்ள கலைப்பொருள்களுடன் இதர சேவைகளும் பெறப்பட்டுள்ளன.
இது வெறும் எண்களால் ஆன சாதனை மட்டுமல்ல, சிங்கப்பூரர்கள் தங்களின் பொதுவான மரபுடைமையைத் தாங்களாகவே முன்வந்து உரிமை கொண்டாடும் கூட்டுப் பொறுப்புணர்வின் எழுச்சி என்றார் அமைச்சர்.
“மரபுடைமை நம்மை ஒன்றுபட்ட மக்களாக இணைப்பதுடன் சிங்கப்பூர் நமது இல்லம் என்ற உணர்வை ஆழமாக்குகிறது,” என்ற திரு நியோ, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், பாரம்பரியக் கலாசார நடைமுறைகள், மக்கள் ஆகிய மூன்று தூண்களின் வழி நாட்டின் மரபு அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லப்படுவதாகக் கூறினார்.
பாரம்பரிய நடைமுறைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் இளையர்களின் பங்கு இன்றியமையாதது என்று சுட்டிய அமைச்சர், தேசிய மரபுடைமைக் கழகத்தின் முதலாவது ‘சிறந்த இளையர் விருது’ பெற்ற இந்தியப் பாரம்பரிய புல்லாங்குழல் இசைக் கலைஞர் நிரஞ்சன் பாண்டியனை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.
இளைய தலைமுறையினர் மரபுடைமைப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய மரபுடைமைக் கழகத்தின் வட்டார மையங்கள் (Heritage Activation Nodes) தியோங் பாரு, தெலுக் பிளாங்கா, மவுண்ட்பேட்டன் ஆகிய வட்டாரங்களையும் சேர்த்து ஆறாக இரட்டிப்பாகியுள்ளன. இந்த வட்டார மையங்களில் செயல்படும் தொண்டூழியர்களில் 60 விழுக்காட்டினர் இளையர்கள் என்றும், அவர்களில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் முதல்முறையாகத் தொண்டூழியம் மேற்கொள்பவர்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சேவைகள், நிபுணத்துவப் பங்களிப்புகளில் 81% வளர்ச்சி
மரபுடைமைத் துறையில் புரவலர்களின் பங்களிப்பு ரொக்க நிதியையும் தாண்டி பல வழிகளில் விரிவடைந்து வருவதைத் தேசிய மரபுடைமைக் கழகத்தின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் தொழில்முறை நிபுணத்துவம், தொழில்நுட்பம், இடவசதி உள்ளிட்ட பொருள்வடிவ ஆதரவுகள் (In-kind donations) 81 விழுக்காடு உயர்ந்து $10.33 மில்லியனை எட்டியுள்ளது.
அரும்பொருளகங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட கலைப்பொருள்களின் மதிப்பு 51 விழுக்காடு அதிகரித்து $1.29 மில்லியனாகப் பதிவானது.
இவ்வாண்டு விருது பெற்ற நிறுவனங்களில், சிங்கப்பூரின் மரபுடைமைக்கு ஆற்றிவரும் பங்களிப்பிற்காக எஸ்பிஎச் மீடியா நிறுவனமும் அங்கீகரிக்கப்பட்டது.
சமூக மைல்கற்களுக்கு வலுசேர்த்த உள்ளூர்ப் பங்காளிகள்
இந்திய மரபுடைமை நிலையத்தின் 10ஆம் ஆண்டுநிறைவைக் குறிக்கும் வகையில், லிட்டில் இந்தியாவின் வர்த்தகர்கள், சமூகப் பங்காளிகள், தனிநபர்கள் கைகோத்து மொத்தம் $320,000 நிதியாதரவை வழங்கினர்.
பெறப்பட்ட அந்த நிதி, இந்திய மரபுடைமை நிலையத்தின் காட்சிப் படைப்புகளையும் சிறப்புத் திட்டங்களையும் மேம்படுத்தவும் பன்முகப் பார்வையாளர்களிடையே நமது கலாசாரம் குறித்த புரிதலையும் மதிப்பையும் ஆழப்படுத்தவும் உதவும் என்று இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைவர் ஆர். ராஜாராம் தெரிவித்தார்.
மரபுடைமை என்பது தானாக நிலைத்துவிடுவதில்லை என்று சுட்டிய அவர், “நமது கதைகளும் பாரம்பரியங்களும் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படுவதை உறுதிசெய்ய நிறுவனங்கள், குடும்பங்கள், சமூகப் பங்காளிகள், தனிநபர்களின் ஆதரவும் பங்களிப்பும் அவசியமாகிறது,” என்றார்.
இந்திய மரபுடைமை நிலையம் வெறும் கலைப்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்படும் இடம் மட்டுமல்ல என்று குறிப்பிட்ட திரு ராஜாராம், மக்களின் கதைகள், நினைவுகள், பங்களிப்புகளால் செதுக்கப்பட்ட ஒரு துடிப்பான சமூகக் களம் என்றார்.
லிட்டில் இந்தியாவில் 1948 முதல் பாரம்பரிய நகை வணிகத்தில் ஈடுபட்டு வரும் அணி மணி பொற்சாலை, நிலையத்திற்கு $10,000 நிதி ஆதரவு வழங்கிப் புரவலராக இவ்விழாவில் அங்கீகரிக்கப்பட்டது.
நவீன காலகட்டத்தில் நமது கலைகளும் விழுமியங்களும் மறைந்துவிடாமல் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டும் என்றார் நிறுவனத்தின் இயக்குநர் கருணாநிதி தனராஜ்.
“ஒவ்வொரு துளியும் இணையும்போதுதான் பெருங்கடல் உருவாகிறது. அதேபோல, அனைவரும் தங்களால் இயன்ற பங்களிப்பை நல்கும்போது நமது பாரம்பரியமும் பண்பாடும் நிலைத்து நிற்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
பண்டைய கலைகளையும் பண்பாட்டு மரபுகளையும் கட்டிக்காப்பது ஒவ்வொருவரின் கூட்டுப் பொறுப்பு என்று கூறிய அவர், இளைய தலைமுறையினர் தங்களது வரலாற்று வேர்களை உணர்ந்து பெருமைகொள்ளும் வகையில் கலாசார அமைப்புகளுக்குத் தொடர்ந்து நிறுவனம் துணைநிற்கும் என்றார்.
