உயர்நிலைப் பள்ளி நேரடிச் சேர்க்கைக்கு இந்த ஆண்டு (2024) தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயிலும் 16,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் மொத்தம் 42,500 விண்ணப்பங்களைச் சமர்ப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஒப்புநோக்க, சென்ற ஆண்டு 14,500 மாணவர்கள் மொத்தம் 38,000 விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர். அதற்கு முந்தைய ஆண்டு 12,200 மாணவர்களிடமிருந்து மொத்தம் 31,800 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
‘டிஎஸ்ஏ’ எனப்படும் பள்ளி நேரடிச் சேர்க்கை முறையின்கீழ், மாணவர்கள் தங்கள் திறன்களின் அடிப்படையில் அதிகபட்சம் மூன்று பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.
விளையாட்டு, நிகழ்த்துகலை அல்லது குறிப்பிட்ட பாடத்தில் சிறப்புத் திறன்பெற்ற மாணவர்கள் தொடக்கப் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (பிஎஸ்எல்இ) எழுதுவதற்கு முன்பாகவே இந்த முறையின்கீழ் உயர்நிலைப் பள்ளிகளில் சேர்வதற்கான இடத்தை உறுதிசெய்துகொள்ள முடியும்.
இந்த ஆண்டு கூடுதலான மாணவர்கள் பிஎஸ்எல்இ தேர்வை எழுதவிருப்பதும் விண்ணப்பித்தோர் எண்ணிக்கை அதிகரித்ததற்குக் காரணமாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கப் பள்ளி இறுதியாண்டுத் தேர்வை 41,000 மாணவர்கள் எழுதவுள்ளனர். சென்ற ஆண்டு இந்த எண்ணிக்கை 38,100ஆக இருந்தது.
பொதுவாக, பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் (ஓ நிலை) தேர்வை எழுதாமல் ஆறு ஆண்டுகள் கழித்து மேல் நிலைத் (ஏ நிலை) தேர்வுகளை எழுத வழிவகுக்கும் ‘ஐபி’ எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட பாடத்திட்டத்தை வழங்கும் பள்ளிகள் 30 முதல் 35 விழுக்காடு வரையிலான மாணவர்களை உயர்நிலை 1ஆம் வகுப்பில் நேரடிச் சேர்க்கை முறை மூலம் சேர்க்க முடியும்.
மற்ற பள்ளிகள் ‘டிஎஸ்ஏ’ மூலம் 20 விழுக்காடு வரையிலான மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள இயலும்.
சிறப்புத் தன்னாட்சிப் பள்ளிகளான ‘என்யுஎஸ் ஹை’ கணித, அறிவியல் பள்ளி, சிங்கப்பூர் கலைப் பள்ளி, சிங்கப்பூர் அறிவியல், தொழில்நுட்பப் பள்ளி மூன்றும் 100 விழுக்காட்டு மாணவர்களையும் நேரடிச் சேர்க்கை முறை மூலமாகவே சேர்த்துக்கொள்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
இத்தகைய பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்க்கை உறுதிசெய்யப் பெற்ற மாணவர்களில் ஹென்றி பார்க் தொடக்கப் பள்ளியின் ரேச்சல் ஊயியும் ஒருவர்.
சிங்கப்பூர் கலைப் பள்ளியில் சேர இவருக்கு இடம் கிடைத்துள்ளது. நியூ டவுன் உயர்நிலைப் பள்ளியும் இவருக்கு இடம் வழங்கியுள்ள நிலையில் செயிண்ட் மார்கரெட் உயர்நிலைப் பள்ளி இவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.
ரேச்சல் சிறு வயது முதற்கொண்டே ஓவியத்தில் ஆர்வம் காட்டுவதாகவும் தொடக்கப் பள்ளி 1ஆம் வகுப்பிலிருந்தே அவர் தனிப்பட்ட முறையில் ஓவிய வகுப்புகளுக்குச் செல்வதாகவும் தாயார் ஹான் ஹுவீ பிங் கூறினார்.
“இத்தகைய சேர்க்கை முறை குறுக்குவழி என்று பெற்றோர் சிலர் நினைக்கக்கூடும். ஆனால் திறமையும் ஆர்வமும் உள்ள மாணவர்கள் அதற்கான பள்ளியில் அதேபோன்ற மனப்பாங்குடைய சக மாணவர்களுடன் பயில்வதற்கான வாய்ப்பு இது,” என்றார் திருவாட்டி ஃபெர்லின் டான். இவரது மகனுக்கு சிங்கப்புர் அறிவியல், தொழில்நுட்பப் பள்ளியில் இடம் கிடைத்துள்ளது.
பள்ளி நேரடிச் சேர்க்கைக்கான முடிவுகளை செப்டம்பர் 9ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளிகளிடமிருந்து மாணவர்கள் பெற்றுக்கொள்வர்.