ஜுவல் சாங்கிக்குப் புதிய உச்சமாக 80 மில்லியன் பேர் வருகை

2 mins read
395830a3-5972-4966-8d5a-d170b093d19b
ஜுவல் சாங்கிக்கு வருகை தந்தோரின் மொத்த எண்ணிக்கையில், வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளின் எண்ணிக்கை 2024ல் 35 விழுக்காடாக அதிகரித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜுவல் சாங்கி விமான நிலையம் 2024ஆம் ஆண்டில் தொடர்ந்து வலுவாக மீட்சி கண்டது. அதன்படி, புதிய உச்சமாக ஜுவல் சாங்கிக்கு 80 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வருகை தந்திருந்தனர்.

பிரபல தளமாக விளங்கும் இவ்விடம், 2019ஆம் ஆண்டு திறக்கப்பட்டதிலிருந்து பதிவான ஆக அதிக எண்ணிக்கை இது.

இதுகுறித்து ஜனவரி 27ஆம் தேதி அறிவித்தபோது, 2023ஆம் ஆண்டின் 74 மில்லியன் பேருடன் ஒப்பிடுகையில் 2024ல் வருகை தந்தோரின் எண்ணிக்கையில் 10 விழுக்காடு அதிகரிப்பு இருந்ததாக ஜுவல் சாங்கி தெரிவித்தது.

மேலும், விற்பனையில் சுமார் 5 விழுக்காடு அதிகரிப்பும் 2024ல் இருந்ததாகக் கூறப்பட்டது.

வருகை தந்தோரின் மொத்த எண்ணிக்கையில், வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளின் எண்ணிக்கையும் 2024ல் 35 விழுக்காடாக அதிகரித்ததாகக் கூறப்பட்டது. அதிலும் சீனா, தைவான், மலேசியா, ஆஸ்திரேலியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளே அதிகம் வந்திருந்தனர்.

சிங்கப்பூரின் தேசிய தினமான, ஆகஸ்ட் 9ஆம் தேதி, 2024ஆம் ஆண்டில் ஆக பரபரப்பான தினமாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டது. 2020ஆம் ஆண்டை அடுத்து முதன்முறையாக 354,036 பேர் அன்றைய தினம் ஜுவலுக்கு வருகை புரிந்திருந்தனர்.

கொண்டாட்டங்கள், சிறப்புச் சலுகைகள் ஆகியவற்றால் நீண்ட விடுமுறை வாரயிறுதியாக இருந்த ஆகஸ்ட் 9 முதல் 11 வரை ஒரு மில்லியன் பேரை ஜுவல் வரவேற்றதாக அறியப்படுகிறது.

இந்நிலையில், கடைத்தொகுதியில் மேலும் 30 புதிய கடைகள் 2025ஆம் ஆண்டு சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது $1.7 பில்லியன் மதிப்பிலான இந்த வர்த்தக வளாகத்தில் 260க்கும் அதிகமான சில்லறை வர்த்தகக் கடைகளும் உணவகங்களும் இயங்கி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்