யுஓபி வங்கி, அடுத்த மூன்றாண்டுகளுக்கு $3 பில்லியன் உபரி மூலதனத்தை அதன் பங்குதாரர்களுக்குத் திருப்பித் தருவதாக புதன்கிழமை (பிப்ரவரி 19) தெரிவித்தது.
சிறப்பு ஈவுத்தொகையும் அடுத்த மூன்றாண்டுகளுக்கு பங்குகளைத் திரும்ப வாங்கும் திட்டமும் இதில் அடங்கும்.
2024 நிதியாண்டின் நான்காம் காலாண்டுக்கான யுஓபியின் நிகர லாபம் ஆண்டு அடிப்படையில் 9 விழுக்காடு கூடி $1.52 பில்லியனானது. இதனால், 2024ல் அவ்வங்கி சாதனை அளவாக $6 பில்லியன் லாபம் ஈட்டியது. அதற்கு முந்தைய ஆண்டைவிட இது 6 விழுக்காடு அதிகம்.
2024 நவம்பரில் வெளியிடப்பட்ட பங்குகளைத் திரும்ப வாங்கும் $3 பில்லியன் திட்டத்துக்கும் மேலாக, மூலதனத்தைத் திருப்பித் தரும் புதிய ஈவுத்தொகையையும் டிபிஎஸ் பிப்ரவரி 10ல் அறிவித்தது. இதனால், அதன் பங்கு விலை ஏறுமுகம் கண்டது.
ஒரு பங்கிற்கு 50 காசு சிறப்பு ஈவுத்தொகையை 2025ல் இரு கட்டங்களாக வழங்க யுஓபி முன்மொழிகிறது. 2025ல் அவ்வங்கியின் 90வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக, $0.8 பில்லியன் உபரி மூலதனத்தை அது திருப்பித் தருகிறது.
பங்குகளைத் திரும்ப வாங்கும் புதிய $2 பில்லியன் திட்டமும் அமைக்கப்பட்டுள்ளது.
2024 நிதியாண்டின் பிற்பாதிக்காக, ஒரு பங்கிற்கு 92 காசு இறுதி ஈவுத்தொகையை யுஓபி அறிவித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இது 85 காசாக இருந்தது.
இதன்மூலம், ஆண்டு முழுவதுக்குமான ஈவுத்தொகை ஒரு பங்கிற்கு $1.80 ஆகிறது. புதன்கிழமை வர்த்தகத்தின் தொடக்கத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவாக யுஓபி பங்கு விலை $39.20ஐ எட்டியது. கடந்த வாரத்தில் அதன் விலை 1.8 விழுக்காடு உயர்ந்தது.