வாடிக்கையாளர் தகவலைத் தவறாக பயன்படுத்திய கைப்பேசி விற்பனையாளருக்கு $48,000 அபராதம்

வாடிக்கையாளர் தகவலைத் தவறாக பயன்படுத்திய கைப்பேசி விற்பனையாளருக்கு $48,000 அபராதம்

2 mins read
fdb82499-9189-4ac2-9a0a-165d51aa87d9
மாதிரிப்படம்: - பிக்சாபே

வாடிக்கையாளரின் அனுமதியின்றி அவருடைய தகவலைப் பயன்படுத்தி 1,000த்திற்கும் அதிகமான கட்டணம் செலுத்தப்பட்ட ‘சிம்’ அட்டைகளை முறைகேடாக பதிவு செய்த கைப்பேசி சில்லறை விற்பனைக் கடை உரிமையாளருக்கு $48,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அக்கடையின் பெயர் ‘மொபைல் சாட்’ என்றும் அக்கடையின் உரிமையாளரின் பெயர் கோ வெய் மிங் @ முகம்மது அமின் கோ என்றும் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் கூறியது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டணம் செலுத்தப்பட்ட ‘சிம்’ அட்டைகளை முறைகேடாக நான்கு ஆண்டுகளாக கோ விற்பனை செய்துவந்தது விசாரணையில் கண்டறியப்பட்டதாக ஆணையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அவருக்கு அதிகபட்ச அபராதமாக $48,000 விதிக்கப்பட்டது எனவும் இத்தகைய குற்றத்திற்காக இதுவரை விதிக்கப்பட்ட தண்டனைகளில் இதுதான் அதிகபட்ச தண்டனை எனவும் ஆணையம் குறிப்பிட்டது.

கட்டணம் செலுத்தப்பட்ட ‘சிம்’ அட்டைகளைப் பதிவு செய்வதற்காக தகவல் தொடர்பு நிறுவனமான ‘எம்1 லிமிடெட்’ நிறுவனத்தின் கணினி அமைப்பின் தகவல்களை அங்கீகாரம் பெறாமல் மாற்றியமைத்த குற்றத்திற்காக கடந்த ஆண்டுச் செப்டம்பர் மாதம் கோவுக்கு 16 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக தனிநபர்களின் தனிப்பட்ட விவரங்களைத் தவறுதலாக பயன்படுத்தியது தொடர்பான இரண்டாவது வழக்கு இது என ஆணையம் கூறியது.

முதல் வழக்கில் தொடர்புடைய கைப்பேசி சில்லறை விற்பனை கடையின் பெயர் ‘யோஷி மொபைல்’. இக்கடையின்மீது சட்டவிரோதமாக ‘சிம்’ அட்டைகளை விற்றதாக குற்றஞ்சுமத்தப்பட்டது.

இக்குற்றத்திற்காக அக்கடைக்கு $21,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தகவல்களைத் தவறாக பயன்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களைத் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் எனவும் அச்செயலில் ஈடுபடும் சில்லறை விற்பனையாளர்கள் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையம் வன்மையாக கண்டித்தது.

குறிப்புச் சொற்கள்