2026ல் ஆட்சேர்ப்பு, சம்பள உயர்வு மெதுவடையலாம்

2026ல் ஆட்சேர்ப்பு, சம்பள உயர்வு மெதுவடையலாம்

2 mins read
பொருளியல் மெதுவடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
b4a276cb-9ac4-4ff4-9118-caf13770df7b
மத்திய கிழக்கில் எழுந்துள்ள பூசல் காரணமாக நிச்சயமற்ற நிலைமை தொடர்கிறது. இதனால் புதிதாக ஊழியரை வேலைக்குச் சேர்ப்பதில் நிறுவனங்கள் கவனமாக உள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் இந்த ஆண்டு வேலைக்கு ஆளெடுப்பதும் சம்பள உயர்வையும் நிறுவனங்கள் கவனமாக கையாளக்கூடும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் எழுந்துள்ள பூசல் காரணமாக நிச்சயமற்ற நிலைமை தொடர்கிறது. இதனால் புதிதாக ஊழியரை வேலைக்குச் சேர்ப்பதில் நிறுவனங்கள் கவனமாக உள்ளன.

அதேநேரம், கடந்த ஆண்டு வழங்கிய ஊதிய உயர்வைவிட இந்த ஆண்டில்ஊதிய உயர்வு சற்று குறைவாக இருக்கக்கூடும் என்று நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் போர் வெடித்ததிலிருந்து ஒட்டுமொத்த வர்த்தக நிலவரமும் மெதுவடைந்துள்ளதாக நாணய ஆணையம் கூறுகிறது.

“பொருளியல் மெதுவடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் குறைவாக இருக்கக்கூடும்,” என்று நாணய ஆணையம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.

இந்நிலையில், சிங்கப்பூர் வாசிகளின் வேலைவாய்ப்பு வளர்ச்சி சீராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டைச் சார்ந்த மற்றும் நவீனச் சேவைத் துறைகளில் வேலை வாய்ப்புகள் இருப்பது அதற்குக் காரணம்.

சுகாதாரம், சமூக சேவை, பொதுப் பணி, கல்வி ஆகிய துறைகளில் ஊழியருக்கான தேவை தொடர்ந்து இருக்கின்றன. அதேபோல் பொருளியல் தொழில்நுட்பத் துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

மோசமாகப் பாதிக்கப்படும் துறையில் எரிசக்தித் துறை உள்ளது. அதன் சந்தை நிலவரம் தற்போது சாதகமாக இல்லாதது வேலை வாய்ப்புகளைக் குறைத்துள்ளது.

முன்னதாகவே அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு, படிப்படியான சம்பள உயர்வு முறை உள்ளிட்டவற்றுக்கு ஆதரவுத் திட்டங்கள் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்த்ததைவிடப் பொருளியல் மெதுவடைந்தால் ஊழியரணிச் சந்தையில் நிலைமை மோசமாகும் என்று நாணய ஆணையம் எச்சரித்துள்ளது. புதிய வேலைகள் உருவாகாமல் போகும், ஆட்குறைப்பு அதிகமாகலாம், சம்பள உயர்வு குறையலாம் என்றும் அது குறிப்பிட்டது.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் சிங்கப்பூரில் பொருளியல் ரீதியாக என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மூன்று அமைச்சுகள் அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிட்டன. அதைத் தொடர்ந்து தற்போது நாணய ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்