புதிய பட்டதாரிகள் பணியமர்த்தப்படுவது குறையவில்லை: அமைச்சர் டான் சீ லெங்

புதிய பட்டதாரிகள் பணியமர்த்தப்படுவது குறையவில்லை: அமைச்சர் டான் சீ லெங்

2 mins read
e050faa3-699c-488b-ad69-5c72e6c22a1f
கடந்த ஆண்டு 74.4 விழுக்காட்டுப் புதிய பட்டதாரிகள் வேலையில் பணியமர்த்தப்பட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் புதிய பட்டதாரிகளுக்கு முதல் வேலை கிடைக்க கூடுதல் நேரம் எடுக்கலாம். இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இளம் பட்டதாரிகள் முதல் வேலையில் பணியமர்த்தப்படும் போக்கு நிலையாக இருப்பதாய் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வேலைவாய்ப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு டாக்டர் டான் செவ்வாய்க்கிழமை (மே 5) பதிலளித்தார்.

பயிற்சி வேலை தொடர்பான அனுபவங்கள் இல்லாத இளையர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது சிரமமாக இருக்கலாம் என்ற கருத்து நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

அத்துடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேட்டில் வெளிவந்த ஒரு கட்டுரையின் அடிப்படையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

2022ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க கடந்த ஆண்டு பணியமர்த்தப்பட்ட புதிய பட்டதாரிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கட்டுரை எடுத்துக்காட்டியது.

2022ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட பட்டதாரிகளின் எண்ணிக்கை 87.5 விழுக்காடு. கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 74.4 விழுக்காடாக இருந்தது.

அந்தப் புள்ளிவிவரங்களின் பின்னணியைப் புரிந்துகொள்ளவேண்டும் என்ற டாக்டர் டான், கொவிட்-19 நோய்ப் பரவலுக்குப்பின் சிங்கப்பூர் நிறுவனங்கள் புதிய பட்டதாரிகளைப் பணியமர்த்துவதில் மிகவும் மும்முரமாக இருந்தன என்றார்.

எனவே, ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் பாராமல், இளம் பட்டதாரிகள் பணியமர்த்தப்படும் நீண்டகாலப் போக்கை ஒட்டுமொத்தமாகக் கணக்கில் எடுக்கும்படி டாக்டர் டான் அறிவுறுத்தினார்.

25லிருந்து 29க்கு வயதுக்கு இடைப்பட்ட இளம் பட்டதாரிகள் கடந்த பத்தாண்டுகளில் புதிய வேலையில் பணியமர்த்தப்பட்ட விகிதத்தில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்றார் டாக்டர் டான்.

ஒருசில புதிய பட்டதாரிகளுக்கு முதல் வேலை உடனடியாகக் கிடைக்காமல் சற்று தாமதமாகக் கிடைத்திருக்கலாம். ஆனால் அத்தகையோருக்கு எப்படியும் வேலை கிடைத்துள்ளது என்று டாக்டர் டான் விளக்கம் அளித்தார்.

சிங்கப்பூர் ஊழியர்களில் ஐந்தில் ஒருவர் வேலைக்குத் தேவையானதைவிட அதிக தகுதியுடையவராக இருப்பதாக மனிதவள அமைச்சு அண்மையில் ஆய்வு ஒன்றை வெளியிட்டது.

அத்தகைய சூழலைக் குறைக்க அமைச்சு ஏதேனும் உத்திகளைக் கொண்டுள்ளதா என்றும் பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

தொழிற்துறைக்குத் தேவையான திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள உயர் கல்வி நிலையங்கள் தொழிற்துறை பங்காளிகளுடன் அணுக்கமாகச் செயல்படும் என்று டாக்டர் டான் எடுத்துரைத்தார்.

தொடக்கநிலை தகுதிகளைத் தாண்டி வாழ்நாள் கற்றலை ஊழியர்கள் அரவணைக்கவேண்டும் என்று டாக்டர் டான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்