கடந்த 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தர்மிதா ராய், பூட்டானில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கான ஒரு முக்கியப் பயிற்சி மையமான, கேசர் கியால்போ மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தாதிமை, பொது சுகாதாரத் துறையில் ஒரு தாதிமை மாணவியாக இருந்தார்.
கடந்த 2024ல் பட்டம் பெற்ற பூட்டானிய கல்விமான்களின் முதல் தொகுதியினரிடமிருந்து சிங்கப்பூரின் ஆசிய தாதிமைக் கல்வி உபகாரச் சம்பளம் பற்றி அறிந்துகொண்ட பிறகு, அவர் சிங்கப்பூருக்கு வருவதற்கு விண்ணப்பிப்பதற்காக, தமது சொந்த நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் தனது இரண்டாம் ஆண்டுப் பட்டப்படிப்பிலிருந்து விலகினார்.
மே மாதம் தனது பட்டயப் படிப்பை முடித்த பிறகு, அவர் தேசிய தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தில் ஒரு தாதியாகப் பணியில் சேர்ந்தார்.
இதன் மூலம், இங்குள்ள பொதுச் சுகாதாரக் கழகங்களில் ஒருங்கிணைக்கப்பட்டு வரும் பூட்டானிய தாதியர்களின் வளர்ந்து வரும் குழுவில் அவரும் இணைந்தார்.
“சிங்கப்பூர் மிகவும் முன்னேறியுள்ளது. குறிப்பாக அதன் சுகாதார அமைப்பு. இங்கு வந்து படித்து, தரமான பணி அனுபவங்களைப் பெறுவது ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும்,” என்று தர்மிதா ராய் கூறினார்.
“இங்கு வருவது தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் நாங்கள் வளர உதவும்,” என்றார் அவர்.
உபகாரச் சம்பளம் பெற்ற 40 பூட்டானியர்கள்
சிங்கப்பூரின் பொதுச் சுகாதாரக் கழகங்களின் தாய் நிறுவனமான சுகாதார அமைச்சு குழுமத்தின்படி, பூட்டானிய ஆசிய தாதிமை கல்வி உபகாரச் சம்பளம் பெற்ற சுமார் 40 பேர் தற்போது பொதுச் சுகாதாரத் துறையில் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 1994ஆம் ஆண்டு முதல் 8,000 தாதியரை உருவாக்கியுள்ள இந்த முழு நிதியுதவி பெறும் கல்வி உபகாரச் சம்பளத்துக்கு, ஆசிய நாடுகளைச் சேர்ந்த கல்வி உபகாரச் சம்பளம் பெற்றவர்கள், நீ ஆன் அல்லது நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் மூன்றாண்டு தாதிமைத் துறை பட்டயப் படிப்பை முடித்த பிறகு, ஆறாண்டு பிணைமுறி (பாண்ட்) தேவைப்படுகிறது.
செயல்பாடு, மனிதவளத் தேவைகளின் அடிப்படையில், அவர்கள் மூன்று பொதுச் சுகாதாரக் குழுமங்களில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் சமூக மருத்துவமனைகளில் பணியமர்த்தப்படுகிறார்கள் என்று சுகாதார அமைச்சுக் குழுமம் கூறியது.
இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இதுவரை பயன்படுத்தப்படாத சந்தைகளில் சிங்கப்பூர் ஆள்சேர்ப்பு முகாம்களை நடத்தியதாக 2023ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.


