மறுபயனீடு செய்யக்கூடிய பொருள்களைப் பிரித்துப்போடுவது மாசுபடுவதைப் பெரிய அளவில் கட்டுப்படுத்தக்கூடும் என்று அரசாங்க சார்பற்ற ஸீரோ வேஸ்ட் எஸ்ஜி (Zero Waste SG) அமைப்பு தெரிவித்துள்ளது.
அதற்கென 2024ஆம் ஆண்டிலிருந்து தீவெங்கும் கூடுதலாகச் சுமார் 40 இடங்கள் சேர்க்கப்பட்டன. ஒவ்வொரு கழக புளோக்குக்கும் கீழ் உள்ள நீல நிற மறுபயனீட்டுத் தொட்டிகளுக்கு ஒரு மாற்றுத் தெரிவாகப் புதிய தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
கழிவுகளைக் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் ஸீரோ வேஸ்ட் எஸ்ஜி அமைப்பு, குவீன்ஸ்டவுனில் ஜூன் மாதம் அறிமுகப்படுத்திய முதல் மறுபயனீட்டுத் தொட்டி மூலம் மறுபயனீட்டுப் பொருள்கள் மாசுபடும் விகிதம் 5 விழுக்காடு குறைந்ததாகத் தெரிவித்தது.
நீல நிற மறுபயனீட்டுத் தொட்டிகளில் மறுபயனீடு செய்யக்கூடிய பொருள்கள் 40 விழுக்காடு மாசுபடுகின்றன. 2017ஆம் ஆண்டிலிருந்து அந்த விழுக்காடு குறையவில்லை.
மறுபயனீடு செய்ய முடியாத பொருள்கள், உணவுடன் கூடிய குப்பைகள், மின் கழிவுகள் ஆகியவை நீல நிற தொட்டிகளில் வீசப்படுவதால் மறுபயனீடு செய்யக்கூடிய பொருள்கள் மாசுபடுகின்றன. அவ்வாறு மாசுபடும் மறுபயனீடு செய்யக்கூடிய பொருள்கள் எரிக்கப்படுகின்றன.
உள்ளூர்க் கழிவு நிர்வாக நிறுவனமான 800 சூப்பர், பீஷான், சின் மிங் ஆகிய வட்டாரங்களில் நடத்திய ஈராண்டு சோதனை திட்டத்தின் முடிவில் மறுபயனீடு செய்யக்கூடிய பொருள்களைப் பிரித்துபோடுவது அவை மாசுபடும் விகிதத்தை 10 விழுக்காடு வரை குறைப்பதாகச் சொன்னது.
குடியிருப்பு வட்டாரங்களிலிருந்து மறுபயனீடு செய்யக்கூடிய பொருள்களைச் சேகரித்து வருவதற்காக தேசியச் சுற்றுப்புற அமைப்பு நியமித்த நிறுவனங்களில் 800 சூப்பர் நிறுவனமும் ஒன்று.
800 சூப்பர் நிறுவனம் மறுபயனீட்டுக்கான பொருள்களைப் பிரிக்கக்கூடிய விவேக மறுபயனீட்டுப் பெட்டிகளில் காணப்படும் மாசுபடாத பொருள்களால் கிடைக்கும் தீர்வு ஊக்கமளிப்பதாக உள்ளது என்று சுட்டியது.
தொடர்புடைய செய்திகள்
பீஷான் ஈஸ்ட்- சின் மிங்கில் உள்ள 10 இடங்களில் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், நிறுவனம் அதன் கட்டமைப்பை முதன்முறையாகச் சோதித்தது. அதன் விவேக அடிப்படையிலான மறுபயனீட்டுத் தொட்டிகள் காகிதங்கள், பிளாஸ்டிக், அலுமினியம், கண்ணாடி, உலோக டின்கள், துணிமணிகள் ஆகிய பொருள்களுக்குத் தனித்தனி பிரிவுகளைக் கொண்டிருந்தன.
அந்தப் பொருள்களைத் தொட்டிகளில் போடும் குடியிருப்பாளர்களுக்குச் செயலி மூலம் வெகுமதி புள்ளிகள் கிடைக்கும். ஜூலை மாத இறுதி நிலவரப்படி 5,900க்கும் அதிகமானோர் திட்டத்தில் இணைந்தனர். அது 2024 மே மாதத்தைவிட இரட்டிப்பு எண்ணிக்கை.
இதுவரை 47 இடங்களில் அந்தத் தொட்டிகள் செயல்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை அங் மோ கியோவில் உள்ளன.
மே மாதம் ஏறக்குறைய 20,000 கிலோகிராம் எடையுடைய மறுபயனீட்டுப் பொருள்கள் தொட்டிகளிலிருந்து சேகரிக்கப்பட்டன.