மக்கள் செயல் கட்சி, தங்கள் செயல்பாடுகளைத் தாங்களே சரிபார்த்துக்கொள்ள முடியாது என்றும் அப்பணியைச் செவ்வனே மேற்கொள்ள எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றும் கூறியுள்ளார் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின் (ஆர்டியு) தலைமைச் செயலாளர் ரவி பிலமோன்.
“அனைவரையும் தட்டி எழுப்பும் சேவல் போலச் செயல்படுவோம். மக்கள் நலனை முன்னிறுத்திப் பணியாற்ற எந்தவித சிரமங்களையும் மேற்கொள்ள அஞ்சமாட்டோம்,” என்றும் அவர் சொன்னார்.
சைனீஸ் கார்டன் எம்ஆர்டி நிலையம் அருகில் உள்ள திடலில் நடைபெற்ற ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதிக்கான அக்கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் அவர் இவ்வாறு சொன்னார்.
பெருநிறுவனங்களையும், முதலாளிகளையும் முன்னிறுத்தி அரசு செயல்படுவதாகவும் பொது மக்களை மனதில் கொண்டு அது செயல்படவில்லை என்றும் சாடினார் ரவி. தொடர்ந்து பேசிய அத்தொகுதி வேட்பாளர் ஒஸ்மான் சுலைமான் அதற்கு எடுத்துக்காட்டாக, ‘க்ரோனி கேப்பிடலிசம்’ எனும் பொருளியல் அமைப்புப் பட்டியலில் 2023ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு நான்காமிடம் கிடைத்துள்ளதைச் சுட்டினார்.
ஜூரோங் சென்ட்ரல் தனித்தொகுதி வேட்பாளரான கலா மாணிக்கம் பேசுகையில், குறிப்புகள் கொடுப்பது போலப் பாவனை செய்து தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்த இளையரைச் சந்திக்க நேர்ந்ததாகவும், அவரது மனநலனை எண்ணி நெஞ்சம் பதைபதைத்ததாகவும் நெகிழ்ச்சியுடன் கண்ணீர் மல்கப் பகிர்ந்தார்.
மூத்தோர் நலன், அவர்களுக்கான கண்ணியமான வாழ்வு, இளையர் மனநலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.
தற்காலம் இருவேறு சிங்கப்பூர் இருப்பதுபோல உணர்வதாகக் கூறிய ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி வேட்பாளர் ஷரத் குமார், “பொதுமக்களுக்கான சிங்கப்பூர் கண்டிப்புடன் இருப்பதுபோலத் தோன்றுகிறது, இரண்டாம் வாய்ப்போ, விளக்கமளிக்கும் வாய்ப்போ கொடுப்பதில்லை. அதிகாரத்திலுள்ளோருக்கான மற்றொரு சிங்கப்பூர் அவர்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கடந்து செல்ல வாய்ப்பளிக்கிறது,” என்று குற்றஞ்சாட்டினார்.
“தவறுகள் நடந்தால் பொறுப்பேற்பது தான் நல்ல நிர்வாகம்,” என்று கூறிய நீ சூன் குழுத்தொகுதி வேட்பாளர் பாங் ஹெங் சுவான், வீவக வீடுகளின் பொதுச் சுகாதாரம், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உயர்வுக்கு மத்தியில் சிங்கப்பூர்ச் சிற்பிகள் நினைவகத்துக்கு 330 மில்லியன் வெள்ளி செலவு ஏன் என்றும் கேள்வியெழுப்பினார்.
தொடர்புடைய செய்திகள்
தொடர்ந்து, ஒவ்வொரு அமைச்சுக்கும், ஆணைபெற்ற அமைப்புகளுக்கும் முக்கியச் செயல்திறன் குறியீடுகள் வகுக்கப்பட்டு, அவைகுறித்த தகவல்கள் வெளிப்படையாகப் பகிரப்பட வேண்டும் என்றார்.
பெருந்திட்டங்கள் தொடங்கும் முன் அவற்றை விரிவான இடர் மதிப்பீட்டுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் பரிசுப்பையுடன் மக்களைச் சந்திக்கும் தலைவர்களைவிடக் கேள்விகள் கேட்கும் தலைவர்கள் வேண்டும என்றார் ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி வேட்பாளர் எமிலி வூ.
தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணியினைக் கடமை உணர்வுடன் மேற்கொள்கிறார்களா, அல்லது மில்லியன் வெள்ளியில் ஊதியம் பெறும் பகுதி நேரப் பணியாகப் பார்க்கிறார்களா என்று அவர் கேள்வியெழுப்பினார்.