வானத்தை வசப்படுத்திய செஞ்சிங்கங்கள், முக்குளிப்பாளர்கள்

2 mins read
சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டில் செஞ்சிங்கங்கள், முக்குளிப்பாளர்களின் இடத்தைப் பிடிக்கக் கருமேகங்களுக்கே மனம் வரவில்லை.
d954500e-9fe5-4ce1-b6b6-57398deb85cd
எச்225எம் ஹெலிகாப்டரிலிருந்து குதித்து மரினா பேயில் இறங்கிய ஏழு முக்குளிப்பாளர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாடாங்கில் பிற்பகல் 5 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து இடி ஒலித்த செஞ்சிங்கங்கள், முக்குளிப்பாளர்களின் வான்குடை சாகச அங்கம் நிறுத்தப்படுமோ என்ற கேள்வி. பார்வையாளர் மனங்களில் தோன்றியது.

சில நிமிடங்களில் தூறலும் தொடங்கியது. ஆனால் சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டில் செஞ்சிங்கங்களின் இடத்தைப் பிடிக்க மேகங்களுக்கே மனம் வரவில்லைப் போலும். அவை வந்த வேகத்திலேயே விடைபெற்று, செஞ்சிங்கங்கள், முக்குளிப்பாளர்களுக்கு வழிவிட்டன.

எனினும், அந்நேரத்தில் வீசிய காற்று, வான்குடை வீரர்களுக்குச் சவால் விடுத்தது. செஞ்சிங்கங்களும் முக்குளிப்பாளர்களும் தம் திறன்களைக் காட்டத் தகுந்த தளமாக அமைந்தது.

முதலில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சியூ எங் செங், இதுவரை 1,085 முறைக் குதித்துள்ளார்.

அவருக்கு அடுத்து, முதலாம் வாரண்ட் அதிகாரி கெல்வின் சான் 942 முறைக் குதித்தவர். இரண்டாம் வாரண்ட் அதிகாரி சேண்டி வோங் 700 முறைக் குதித்தவர். இறுதியாக வந்திறங்கிய முதலாம் வாரண்ட் அதிகாரி யூஜீன் சோ 1,550 முறைக் குதித்துள்ளார்.

இவ்வாண்டின் செஞ்சிங்கங்கள் அங்கம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், தேசிய தின அணிவகுப்பில் செஞ்சிங்கங்கள், சிங்கப்பூர்க் கடற்படையின் முக்குளிப்புப் பிரிவு இரண்டும் இணைந்து புதிதாக ‘ஜம்ப் ஆஃப் யூனிட்டி‘ எனப்படும் ஒருங்கிணைந்த வான்குடை சாகச அங்கத்தைப் படைத்தன.

 ஏழு செஞ்சிங்கங்களுடன் ஏழு முக்குளிப்பாளர்களும் இணைந்து வான்குடை சாகசத்தில் ஈடுபட்டனர்.

முதலில் ஏழு முக்குளிப்பாளர்கள் H225M மீடியம்-லிஃப்ட் ஹெலிகாப்டர்களிலிருந்து 6,000 அடி உயரத்தில் ஒவ்வொருவராகக் குதித்தனர். அவர்கள் மூன்று நொடிகளில் 5,000 அடி விழுந்தபின், வான்குடையைத் திறந்து, வெறும் 300 நொடிகளில் மரினா பே நீர்ப்பகுதிக்குள் இறங்கினர்.

C130 ரக விமானத்திலிருந்து குதித்த ஏழு செஞ்சிங்கங்கள்.
C130 ரக விமானத்திலிருந்து குதித்த ஏழு செஞ்சிங்கங்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதைத் தொடர்ந்து C-130 ரக ஹெர்கியுலிஸ் விமானத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் செஞ்சிங்கங்கள் குழுவாக வெளியேறி வட்ட வடிவை அமைத்தனர்.

ஒரு மணி நேரத்துக்கு 195 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் அவர்கள் குதித்தனர். அதைத் தொடர்ந்து செஞ்சிங்கங்கள், முக்குளிப்பாளர்கள் இணைந்து ஒற்றுமையைக் காட்டும் விதத்தில் வெவ்வேறு இடங்களிலிருந்து ஒரே நேரத்தில் வணக்கம் செலுத்தினர்.

இதற்கு முன்னர் 2018ல் முதன்முறையாக முக்குளிப்பாளர்களும் செஞ்சிங்க குழுவினரும் ஒருங்கிணைந்து குதித்தனர். ஆனால் அப்போது அவர்கள் தனித்தனியாகச் செயல்பட்டு மரினா பேயில் தரையிறங்கினர்.

ஆனால் இம்முறை அவர்கள் வெவ்வேறு இடங்களில் (செஞ்சிங்கங்கள் பாடாங்கிலும் முக்குளிப்பாளர்கள் மரினா பேயிலும்) தரையிறங்கினர்.

“செஞ்சிங்கங்களுடன் முக்குளிப்பாளர்கள் வானிலிருந்து குதித்துத் தரையிறங்கிய அங்கம் நான் சற்றும் எதிர்பார்க்காதது. மிகச் சிறப்பாக இருந்தது,” என்றார் பார்வையாளர் மோகனபிரியா.

குறிப்புச் சொற்கள்