ரெட்மார்ட் நிறுவனம் அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்களை விநியோகிக்கும் தானியக்க இயந்திரங்களை ராஃபிள்ஸ் பிளேஸ் ரயில் நிலையத்தில் அமைத்துள்ளது.
இத்தகைய ஐந்து இயந்திரங்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.
பானங்கள், தண்ணீர், தின்பண்டங்கள் போன்றவற்றுடன் ‘மண்டே’ கூந்தல் பராமரிப்புப் பொருள்களையும் இவற்றில் வாங்க முடியும்.
எஸ்எம்ஆர்டி நிறுவனம் ராஃபிள்ஸ் பிளேஸ் ரயில் நிலையத்தை இயக்கி வருகிறது. இதில் வர்த்தகர்களுக்கு உதவக்கூடிய புத்தாக்க சில்லறை விற்பனைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் விதமாக ‘ஹைவ் எக்ஸ்பிரஸ்’ (Hive Express) எனும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் பொருள் வழங்கும் தானியங்கிகளையும் வாடிக்கையாளர்கள் தாமே பொருள்களுக்கான விலையைச் செலுத்திவிட்டு, எடுத்துச்செல்லும் முகப்புகள் கொண்ட கடைகளும் அமைக்கலாம்.
இவ்வாறு ‘ஹைவ் எக்ஸ்பிரஸ்’ பகுதியில் இடம்பெறும் முதல் நிறுவனம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது ரெட்மார்ட்.
எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவான ஸ்டெல்லார் லைஃப்ஸ்டைல், செப்டம்பர் 16ஆம் தேதி இதன் தொடர்பில் அறிக்கை வெளியிட்டது.
அதில், பயணிகளுக்கும் சிறிய வர்த்தக நிறுவனங்களுக்கும் உதவக்கூடிய வருங்காலச் சூழலை வடிவமைப்பதில் தாங்கள் கொண்டுள்ள கடப்பாட்டை ‘ஹைவ் எக்ஸ்பிரஸ்’ திட்டம் காட்டுவதாக அது குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ரெட்மார்ட் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ள விலைக்கே தானியங்கிகளில் பொருள்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு லசாடா செயலி மூலம் பணம் செலுத்த வேண்டும்.

