கேலாங் சிராய் சந்தையில் குறையும் வருகையாளர் எண்ணிக்கை

கேலாங் சிராய் சந்தையில் குறையும் வருகையாளர் எண்ணிக்கை

2 mins read
182e15f5-0515-426d-84bf-528a9ec9a790
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) கேலாங் சிராய் சந்தைக்குச் சென்ற முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தந்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மது (இடது), நாடாளுமன்ற நாயகரும் மரீன் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சியா கியன் பெங் (வலமிருந்து மூன்றாமவர்). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கேலாங் சிராய் சந்தையில் குறைவாக மக்கள் வந்து செல்வது அங்குள்ள கடைக்காரர்களுக்கும் அவ்வட்டாரவாசிகளுக்கும் கவலை தருகிறது.

அப்பகுதியின் ஆரவாரத்துக்கு மெருகூட்ட அரசாங்கம் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மது கூறியுள்ளார். நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங் இது குறித்துப் பேச அடுத்த வாரம் அப்பகுதி சமூகத்தைச் சந்திப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திரு சியா, கேலாங் சிராய் சந்தையை உள்ளடக்கிய மரீன் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

சமூகத்தினரின் கருத்து

கேலாங் சிராய் பகுதியில் நிலைமை மெதுவடைந்துள்ளதற்குப் பொருளியல் நிலவரம் காரணம் என்று அப்பகுதி சமூகத்தினர் பலர் கூறுகின்றனர் என்று திரு ஸாக்கி குறிப்பிட்டார்.

திரு ஸாக்கி, அண்மையில் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

மலாய் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரைத் தொடர்புகொள்ளும் முயற்சிகளை விரிபடுத்தவும் வலுப்படுத்தவும் எண்ணம் கொண்டுள்ளதாகவும் அதற்கென எடுக்கப்படும் நடவடிக்கைகளில் கேலாங் சிராய் சந்தையின் நிலைமையை மேம்படுத்துவது குறித்து தாம் ஆலோசித்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சராகப் பொறுப்பு வகித்துவந்த ஃபை‌ஷால் இப்ராஹிம், ஒரு பெண்ணுடன் தகாத முறையில் இணையத்தில் உரையாடியதற்காகக் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 20) நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அரசியலிலிருந்தும் விலகிக்கொண்டார்.

தொகுதி உலா

திரு ஸாக்கியுடன் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) திரு சியா, ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸ்லினா அப்துல் ஹலிம், ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வான் ரிஸால் வான் ஸக்காரியா ஆகியோரும் அவ்வட்டாரத்தில் தொகுதி உலா மேற்கொண்டனர்.

அப்பகுதி குடியிருப்பாளர்கள், வர்த்தகர்கள், கடைக்காரர்கள் ஆகியோரின் மனநிலை, கவலைகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள அந்த நால்வரும் இந்நடவடிக்கையில் ஈடுபட்டனர். இணைப் பேராசிரியர் ஃபை‌ஷால் பதவி விலகிய பிறகும் அவரது பணிகள் தொடரும் என்பதற்கு அரசாங்கம் எவ்வாறு உறுதியளிக்கலாம் என்பதை அறிவதும் நோக்கம் என்றார் தற்காப்பு மூத்த துணை அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் திரு ஸாக்கி.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கேலாங்மேம்பாடுசமூகம்கருத்து